ஜூலை 17                

“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” (ஏசாயா 40:31).

      இன்றைய உலக வாழ்க்கை பொதுவாக மனிதனை அதிகம் சோர்வுக்குட்படுத்துகிறதாயிருக்கிறது. எங்குபார்த்தாலும் பிரச்சனைகள் மலிந்துக் கிடக்கின்றன. அமைதி சீர்குலைந்து வருகின்றது. மனிதனுடைய இருதயம் சோர்ந்து போகிறது. தளர்வுகளும் நம்பிக்கையின்மையும் அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையை மனிதன் இழந்து வருகிறான். நித்தியமான ஒரு வாழ்க்கையைக் குறித்து அறியாதிருக்கிறான்.

      ஆனால் ஒரு கிறிஸ்தவனைப்பற்றி என்ன? அவனுக்கும் இதே போராட்டங்கள் உண்டு. ஆனால் அவனுடைய அனுகுமுறை வித்தியாசமானது. அவன் இவ்வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்தையும் மேற்கொண்டு ஜீவிக்க தேவையான பெலனை எங்கு, எப்படி பெற்றுக்கொள்வது என்பதை அறிந்திருக்கிறான். உலக மனிதன் தன் சிந்தனைகளால் கீழாக போய்கொண்டிருக்கிறான். அவனுக்கு மேலே எழும்பமுடியவில்லை. ஆனால் ஒரு கிறிஸ்தவன் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான புது பெலனை அடைகிறான். அதன் மூலம் மேலும் மேலும் பெலப்படுகிறான். ஆனால் அவன் இதை எப்படிப் பெறுகிறான்? கர்த்தருக்குக் காத்திருப்பது, . அப்படியென்றால் என்ன?

      இதை இரண்டு விதங்களில் சொல்லலாம். ஒன்று தேவனை நோக்கி அமர்ந்திருத்தல், ஜெபித்தல். ஜெபிக்கிறவன் புது பெலனைப் பரத்திலிருந்து பெற்றுக் கொள்ளுகிறான். நீ ஜெபிக்கிற கிறிஸ்தவனா? கர்த்தரிடத்தில் சென்று அந்தந்த நாளின், “தேவைகளுக்கு ஏற்ற பெலத்தைத் தரும்படி தேவனிடத்தில் ஜெபிக்கிறாயா? உன் நேரத்தை ஒதுக்கி அவருடைய பாதத்தில் அமர்ந்திருக்கிறாயா? ஆகவே நீ ஒரு தோற்றுப்போன கிறிஸ்தவனாய் வாழவேண்டிய அவசியமில்லை. இரண்டாவது, அவருடைய காலத்திற்கும், நேரத்திற்கும் பொறுமையாய் காத்திருக்கும்போது தேவ பெலத்தால் நீ இடைக்கட்டப்படுகிறாய். “அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும். (ஏசாயா 30:15). கர்த்தருக்குக் காத்திரு அப்பொழுது நீ புது பெலன் அடைந்து, கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து எழும்புவாய்.