“இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்” (வெளி 21:5).
தேவன் நம்முடைய வாழ்க்கையை எப்பொழுதும் புதுப்பிக்கிறவர். புதிய வழியில் நம்மை வழிநடத்துகிறவரும் அவரே. அதாவது நம்முடைய பழைய தவறுகளில் இருந்து சீர்படுத்துகிறவர். ஏசாயாவில் “பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்” (ஏசாயா 42:9) என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே புதிதான காரியங்களை ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் கர்த்தர் செய்கிறார்.
புதிய ஆவிக்குரிய காரியங்களை கற்றுத் தருகிறார். புதிய ஆவிக்குரிய தெளிவையும், அதை அறிந்து கொள்ளும்படியான ஞானத்தையும் தம்முடைய வசனத்தின் மூலமாக கற்றுத்தருகிறார். ஆகவேதான் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருப்பதின் அடையாளமாக, “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (2கொரி 5:17) என்று பவுல் சொல்லுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பாக, நமக்கு எல்லாம் புதிதாகக் காணப்படுகிறது.
நம்மை பாவத்தின் பிடியிலிருந்தும், பாவ சுபாவத்தில் இருந்து மீட்டப்பட்ட பின்பாக, புதிய நம்பிக்கை, புதிய பெலம், புதிய சுபாவம், புதிய ஜீவன், புதிய கிருபை என்று எல்லாவற்றையும் புதுபித்த தேவன் அவர். ஆகவே நாம் எப்பொழுதும் சோர்ந்து போகவேண்டிய அவசியமில்லை. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவர் இருக்கிறவராகவே இருக்கிறார் என்பதை மறவாதே. எந்த ஒரு சூழ்நிலையிலும் உன்னை கைவிடுகிறவர் அல்ல என்பதை மறவாதே. கர்த்தர் உனக்கென்று மேலான நோக்கத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள். கர்த்தர் தினம் தினம் உன்னை புதிய கிருபைகளினால் திருப்தி செய்வாராக. ஆமென்!