ஜூலை 6              

“எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரிந்தியர் 4:16)

      ஒரு மெய் கிறிஸ்தவன் ஆவிக்குரிய முதிர்ச்சியில் தொடந்து வளரவேண்டும். இன்றைக்கு அநேகர் இரட்சிக்கப்பட்டு எத்தனையோ வருடங்கள் ஆகிறது, என்று சொல்லுவார்கள். ஆனால் அவர்களில் பழைய மனுஷனுக்குரிய தன்மைகளும், அவர்கள் பேச்சில், செய்கையில் உண்மையான முதிர்சியின்மைகளும் சாதாரணமாகக் காணப்படும். அப்படியானால் அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள் அல்லது மாம்சத்துக்குரிய கிறிஸ்தவர்களாய் இருப்பார்கள். கொரிந்து சபையில் இவ்விதமான மக்களைப் பார்க்கிறோம். “இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாய் இருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. பொறாமையும், வாக்குவாதமும், பேதங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா” (1கொரி 3:2, 3). ஆவிக்குரிய பெலன் அவர்களுக்குள் இருக்காது. சோதனைகளில் தடுமாறுகிறவர்களாய், வெகுசீக்கிரத்தில் விழுகிறவர்களாய் காணப்படுவார்கள். உன்னுடைய நிலைமை இவ்விதமாக இருக்குமானால், நீ அதை சிந்தித்து சரி படுத்து.

      ஒரு உண்மையான கிறிஸ்தவனின் வாழ்க்கையில் பாவத்தை மேற்கொள்வதில் அவன் முதிர்ச்சியுள்ளவனாய் இருப்பான். ஏனென்றால் அவன் உள்ளான மனுஷனில் பெலத்தின்மேல் பெலனடைந்து வருவான். தேவ ஆவியானவர் அவ்விதமாய் அவனை பெலப்படுத்துவார். சத்தியத்தை அறிகிற அறிவு அவனுக்கு அவ்விதமான ஞானத்தைக் கொடுக்கும். மாம்சமும் அதின் ஆளுகையும் அவனில் குறைந்துக்கொண்டே போகும். அவன் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்து கொண்டேயிருக்கிறான். உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாகிக்கொண்டே இருப்பான்.

      இது ஏதோ விந்தையென்று எண்ணவேண்டாம். இது ஆவியானவரால் ஒவ்வொரு கிறிஸ்தவனிலும் நடைபெறும் காரியம். அவ்விதம் ஆவியானவர் உன்னில் செயல்பட்டு உன்னை ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொண்டிருக்கிறாரா?