கிருபை சத்திய தின தியானம்

மே 7             ஒருபோதும் வெட்கப்படுவதில்லை       யோவேல் 2 : 21 – 32

நீ சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை’ (யோவேல் 2 : 26)

            பஞ்சத்தில் கடந்து வந்த இந்த மக்களைப்பார்த்து தேவன் இவ்விதம் சொல்லுகிறார். சம்பூரணமாய் சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள். தேவன் எப்போதும் குறைவுகளை நிறைவாக்குகிறவர். தேவன் ஒருவரே மெய்யான நிறைவைக் கட்டளையிடமுடியும். குறைவுகளைக் கர்த்தரிடத்தில் கொடுக்கும்போது தேவன் அதை நிறைவுபடுத்துவார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை எவ்வளவு  குறைவுள்ளதாயிருக்கிறது? நம்முடைய ஜெப வாழ்க்கையில், வேத வாசிப்பில், வேத அறிவில், தேவனை நேசிப்பதில், தேவனுக்கென்று கொடுப்பதில், தேவனுக்குச் செய்யும் பணிகளில் நாம் குறைவுள்ளவர்களாயிருக்கிறோம். ஆனால் அவைகளை ஒத்துக்கொண்டு தேவனிடத்தில் கொண்டு செல்லுங்கள். தேவன் உங்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய வளர்ச்சியையும், ஆசீர்வாதத்தையும் கொடுப்பார்.

            நமது தேவன் அதிசயமானவர் மாத்திரமல்ல. நம்மை அவர் வழிநடத்திவந்த பாதையும் அதிசயமானதாக இருக்கிறதென்று அறிவீர்களா? அநேகர் தங்கள் சொந்த ஞானத்தினால், திறமையினால் இந்த வாழ்க்கையைக் கடந்துவந்ததாகவும், தானே அதற்கு காரணமென்றும் எண்ணுகிறார்கள். அது தவறு தேவனே உன்னை நடத்தினவர். இம்மட்டும் நீ ஜீவனோடிருப்பது, அவருடைய கிருபை, உனக்கு இம்மட்டும் கொடுத்திருக்கிற பெலன்,  கர்த்தர் கொடுத்திருக்கும் பெலன்.  ‘கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப் பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்’. (சங் 31: 21). தேவன் நம்மில் காண்பித்திருக்கிற கிருபை அதிசயமானதல்லவா? தகுதியற்ற நமக்கு தேவன் எவ்வளவு பெரிய கிருபையை வெளிப்படுத்தியிருக்கிறார். என்று நினைக்கும்பொழுது அது மெய்யாலுமே அதிசயம்தான்.

            மேலும் தேவன் உறுதியாய் சொல்லுவது என்னவென்றால், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுபோவதில்லை. ‘ஒருபோதும்’ என்ற வார்த்தையை கவனமாய் சிந்தித்துப்பார்த்து, அதை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள். தேவன் அவ்விதமாகவே உங்களுக்கும் செய்வார்.