“தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்” (எரேமியா 22:29).

இந்த இடத்தில் மூன்று முறை தேவன் அழைக்கிறார். இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும்படியாக இவ்வாறு மூன்று முறை சொல்லுகிறார். அல்லது கேளாதவர்கள் போல இருக்கும் மக்கள் மத்தியில் அவர்கள் கேட்கவேண்டும் என்று தேவன் இவ்விதமாய் சொல்லுகிறார். வேதம் தேவனுடைய வார்த்தை என்ற உண்மையான பயபக்தி இன்றைக்கு அநேகரின்  இருதயங்களில் இல்லாத ஒரு நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தேவன் தம்முடைய திட்டத்தையும் நோக்கத்தையும் மாற்றிவிடவில்லை. இன்றைக்கும் தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமாக மனிதனோடு பேசுகிறார். ஆனால் மனிதனோ தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடாமல் போகிறான். ஆதாம் ஏவாள் எவ்விதம் தேவனுடைய வார்த்தைக்குச் செவிக்கொடாமல் போனார்களோ, அவ்விதமாக மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்குச் செவிக்கொடாமல் போகிறதைப் பார்க்கிறோம். அநேகப் போதகர்களும் ஊழியங்களும் தேவனுடைய வார்த்தையிலிருந்து மக்களைத் திசை திருப்புகிறார்கள். உணர்ச்சி வசப்படுகிற போதனைகளினாலும் அல்லது வெறுமையான அற்புதங்கள் அடையாளங்கள் போன்றக் காரியங்களுக்கு மக்களை திருப்புகிறார்கள். ஆனால் இன்றைக்குக் கர்த்தருடைய வார்த்தையைப் போதித்து அதைக் குறித்த உண்மையான முக்கியதுவத்தை உணர்த்துகிற போதகர்கள் எங்கே? ஆனாலும் இன்றும் தேவன் தம்முடைய வார்த்தையினால் மனிதனோடு செயல்படுகிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்குச் செவிக்கொடுக்கக் கூடிய ஒரு இருதயம் எவ்வளவு அவசியமாய் இருக்கிறது! ஒவ்வொரு நாளும் தேவன் இந்த வார்த்தையின் மூலமாக நம்மோடு பேசுகிறார். இதுவே வழி இதிலே நடவுங்கள் என்று சொல்லி அவர் நம்மை வழிநடத்துகிறார். நாம் கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிக்கொடுப்போமானால் நாம் பிழைப்போம். மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். நாம் கர்த்தருடைய வார்த்தையைச் சார்ந்து பிழைக்கக் கற்றுக்கொள்ளுவோம்.