கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர்  5                         எனது காலங்கள்                       சங் 31:1–15

“என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங் 31:15)

     தாவீது எழுதின மிக உன்னதமான சங்கீதங்கள் அவனுடைய உபத்திரவ வேளைகளில் எழுதப்பட்டவைகள். சவுல் ராஜாவினால் அதிகமான பாடுகளைக் கடந்து சென்ற நாட்களில் எழுதப்பட்ட சங்கீதங்கள் அநேகம். ஒரு கிறிஸ்வனின் வாழ்க்கையில் பாடுகள் ஒருபோதும் வீணல்ல.

    தாவீது எந்த நேரத்திலும் சவுலினால் கொல்லப்படும்படியான வாய்ப்பு இருந்தது. தாவீது காடுகளிலும், மலைகளிலும், வனாந்திரங்களிலும் ஒளிந்து திரியவேண்டியிருந்தது. பசி பட்டினி மத்தியில் அநேகம்  முறை  கடந்து போயிருந்தான். ஆனால் இந்த சூழ்நிலையில் தாவீதின் நம்பிக்கையைப் பார்க்கிறோம். ‘என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது. உம்முடைய  அனுமதியில்லாமல் ஒன்றும் நேரிடமுடியாது.’ என்ன மேலான விசுவாசம் பாருங்கள்! அருமையானவர்களே! உங்களுடைய வாழ்க்கை தாவீதை போல பல நெருக்கம், மரணத்திற்கு அருகில் சென்றுக்கொண்டிருக்கும் பாதையாகவும் இருக்கலாம் ஆனாலும் தேவனிடத்தில்தான் உமது காலங்கள் இருக்கின்றன என்பதை மறவாதே. அவைகள் சூழ்நிலைகள், மனிதர்களைச்  சார்ந்தது அல்ல.

      யோபு பக்தன் சொல்லுகிறான். அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிப்பிட்டிருக்கையில், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துப்போகக்கூடாத எல்லையை  அவனுக்கு ஏற்படுத்தினீர். (யோபு 14:5). ஒவ்வொரு மனிதனுடைய மரணநாள்,  மாதம் அனைத்தும் தேவனுடைய புத்தகத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான் கடந்துப்போகக்கூடாத எல்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. அடுத்த வினாடிக்கு அவன் கடந்து போகமுடியாது. நம் வாழ்க்கை தேவனுடைய  கரத்தில் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த உலகத்தில் என்ன நேரிடுகிறதானாலும், தேவன் அறியாமல் நமக்கு நேரிடுகிறதில்லை. தேவன் நமக்கு நல்லவராக இருப்பதினால் அவர் செய்வது யாவும் நலமே என்ற அசையாத நம்பிக்கையைத் தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். நம்முடைய கரு உருவான  நாளையும் வேளையையும்  கூட தேவன் அறிந்திருக்கிறார். (சங் 139:16)