டிசம்பர் 13
“அவரே என் இரட்சிப்பு;”(யோபு 13:16).
நம் வாழ்க்கையில் கர்த்தரே நம் இரட்சிப்பாக இருக்கிறார். அவரே எல்லாமுமாக இருக்கிறார். என் வாழ்க்கையில் அவரே இரட்சிப்பாக இருக்கிறார் என்றால் அவரே எல்லாவற்றிற்கும் போதுமானவராக இருக்கிறார் என்று நான் நம்புவேன். அவர் இம்மட்டும் வழிநடத்தின கர்த்தர் இனிமேலும் அவர் என்னை வழிநடத்துகிறவராகவே இருக்கிறார். “கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;”(யாத் 15:2).
நம் வாழ்க்கையில் கர்த்தரை உயர்த்துவோம் அப்பொழுது அவர் நமக்கு பெலனாக இருக்கிறவரும் நம்முடைய வாழ்க்கையில் கீதத்தை உண்டுபண்ணுகிறவராக இருக்கிறார். இன்னுமாக “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?”(சங்கீதம் 27:1). கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் இரட்சிப்பாக இருக்கும்பொழுது அவரே நமக்கு வெளிச்சமாக இருக்கிறார். வாழ்க்கையின் சூழ்நிலைகளுக்கும், மனிதர்களுக்கும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
இன்னுமாக சங்கீதம் 62:6-7 ல் “அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது”. அவரே எல்லாவற்றிற்கும் போதுமானவர் என்பதை மறந்துவிடாதே. அவரைவிட்டு எங்கும் போகவேண்டியதில்லை. அவர் உன் சம்பூரணத்திற்கும் போதுமான பரிபூரணமானவர் என்பதை அறிந்துகொள்.