ஆகஸ்ட் 27
“இதோ சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” (வெளி 22:12 )
ஆண்டவராகிய இயேசுவை தன் இரட்சகராக அறியாத மனிதன் எவ்வளவோ இந்த உலகத்திற்காகப் பாடுபடுகிறான். கடைசியில் அவன் அறுப்பது ஆத்தும மரணமே! ஆனால், ஆண்டவராகிய இயேசுவை தன் இரட்சகராக அறிந்த மனிதன், தேவனுக்காக தன் வாழ்க்கையைச் செலவு செய்யும்படியாக எதிர்பார்க்கப்படுகிறான். இந்த வாழ்க்கையில் தேவனுக்காக உழைக்கிற உழைப்பு , படுகிற பிரயாசம், தேவனுடைய பலத்தைக்கொண்டு அவருடைய ராஜ்யத்திற்கென்று ஏறெடுக்கிற முயற்சி ஒருபோதும் வீணல்ல. இந்த உலகத்திலேயும் அதற்கேற்ற பலனை தேவன் கொடுக்கிறார். வரப்போகிற உலகிலும் அதற்கேற்ற பலனை பலமடங்குகளாகத் தருகிறார். ‘இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற் போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்‘ (லூக்கா 18:30)
உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த காலத்தில் அவருக்கென்று பிரயாசப்படாமல், உலகத்திற்காகவே பிரயாசப்படுவாயானால், அவருடைய வருகையின் வேளையிலே மற்றவர்கள் எல்லோரும் பலனைப் பெறுவார்கள் என்பதையும் ஆனால் உன்னுடைய நிலை எப்படியாக இருக்கும் என்பதையும் யோசித்துப்பார்! இந்த வாழ்நாளில் நாம் இயேசுவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும்படி நியமிக்கப்பட்டிருக்கிறோம். ‘ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப்போலவும் அநேகரை நீதிக்குட்ப்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாக்காலங்களிலும் பிரகாசிப்பார்கள். (தானி 12:3)
இந்த உலகில் நீ எவ்வளவு கோடிகோடியாக சம்பாதித்தாலும் அவை அழிந்துபோகும். ஆனால், நீ ஒரு ஆத்துமாவை இயேசுவுக்கென்று ஆதாயப்படுத்தினாலும் அதனுடைய பலனை எண்ணிப்பார். நீ அநேகரை நீதிக்குட்ப்படுத்துவது, உன்னைப் பிரகாசமுள்ள நட்சத்திரமாக உயர்த்துவது மாத்திரமல்ல, நீ யார் யாருடைய இரட்சிப்புக்கு கருவியாகக் காணப்பட்டாயோ அவர்கள் உன்னை கிறிஸ்துவில் வாழ்த்துவார்கள். அது மிகுந்த மகிழ்ச்சியை உனக்கு கொடுக்கும்.