கிருபை சத்திய தின தியானம் 

ஜூன் 28              நீங்கள் என் ஜனமாயிருபீர்கள்         எரேமியா 32:37-42

“அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்,

நான் அவர்கள் தேவனாயிருப்பேன்” (எரேமியா 32:38)

     தேவன் தாமே எரேமியாவின் தீர்க்கதரிசியின் மூலமாக செய்க்கூடிய உன்னதமான காரியத்தைக் குறித்துப் பேசுகிறார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக தமக்கென்று அவர் ஜனங்களை தெரிந்துகொண்டு இரட்சிக்கிறவராக இருக்கிறார். இத அவர் எவ்விதமாக செய்கிறார்? “நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 24:7).

      தேவன் தாமே தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக அவரே கர்த்தர் என்று அறிகிற இருதயத்தை கொடுக்கிறவராக இருக்கிறார். என்ன ஒரு ஆச்சரியமான காரியம் இது. இன்னுமாக “அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்” (எபி 8:10). கர்த்தருடைய வார்த்தையை தம்முடைய மகிமையான செயலின் மூலமாக மனிதனுடைய பொல்லாத இருதயத்தில் உணர்த்துவித்து, அதை விளங்கப்பண்ணி நம் வாழ்க்கையின் பாவ பரிகாரியாக இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தோடு நோக்கிப்பார்த்து, நம்முடைய பாவங்கள் மனிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாற்றக்கூடிய உன்னதமான பகுதியாக இது இருக்கிறது.

     “அப்பொழுது நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்” என்று சொல்லுகிறார். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவை, எப்பொழுதும் ஐக்கியத்தில் இருக்கும்படியாக தேவனே அதை செய்கிறவராக இருக்கிறார். நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு தேவன் பக்கமாக திருப்புவோம். தேவன், நமக்கும் இரட்சிப்பைக் கொடுக்க வல்லவர் என்பதை மறந்துவிடாதே.