கிருபை சத்திய தின தியானம்
செப்டம்பர்:19 என் கிருபை போதும் 2கொரி 12:1-10
‘என் கிருபை உனக்குப் போதும்’ (2கொரிந் 12:9)
தேவன் பவுலுக்குச் சொன்ன இந்த வசனம், எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டது? பவுல் தன்னுடைய வாழ்க்கையில், அதிகமாக உபத்திரவப்படுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒரு சரீர வேதனையை நீக்கும்படியாக ஜெபித்தப்பொழுது அவருக்குக் கொடுக்கப்பட்ட பதில். இது ஒரு சாதாரண வேதனையல்ல. ‘படுவேதனை’ அளித்துக்கொண்டிருந்த ஒன்று. ஏனென்றால் இந்த வேதனை ‘முள்’ என்று அழைக்கப்படுகிறது. பவுல் எப்படியாகிலும் அதிலிருந்து விடுபட வாஞ்சித்து ஜெபித்தார். ஆனால் தேவனிடத்திலிருந்துக் கிடைத்த பதில் வித்தியாசமானதாக இருந்தது.
‘முள்’ உன்னை விட்டு நீக்கப்படாது, ஆனால் அதைத் தாங்கிக்கொள்ள உனக்குப் பெலன் கொடுக்கப்படும். ஏன் அந்த முள் தொடர்ந்து சரீரத்தில் இருக்கவேண்டும்? அதன் அவசியம் என்ன? ஆம், ஆவிக்குரிய நோக்கத்திற்கென்று தேவன் அதை நீக்கிப் போடவில்லை. தேவன் ஆவிக்குரிய நன்மைக்கென்று அதைத் தொடர்ந்து சரீரத்தில் இருக்க அனுமதித்திருந்தார்.
உன்னுடைய வாழ்க்கையிலும் முள் போன்ற காரியங்கள் அனுமதிக்கப்படலாம். ஆனால் தேவன் ‘என் கிருபை உனக்கு போதும்‘ என்று சொல்லும்போது நீ எவ்விதம் அதை ஏற்றுக்கொள்ளுகிறாய்? அநேகர் உடனடியாக தேவனை ஒருவேளை இருதயத்தில் எதிர்க்கிறவர்களாய், முறுமுறுக்கிறவர்களாய் காணப்படுகிறார்கள். ஆனால் பவுல் அதை எவ்விதம் ஏற்றுக்கொண்டார்? பவுல் முறுமுறுக்கவில்லை, சலிப்படையவுமில்லை, தேவனைக்குறித்து குற்றம் சொல்லவும் இல்லை. ஆனால் அதற்கு பதில் ‘ கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்‘ என்றார் (2கொரிந் 12:9). தேவன் என்னுடைய வாழ்க்கையில் இதை ஒரு மேலான ஆவிக்குரிய நோக்கத்திற்கென்று, அவருடைய மகிமை விளங்கும்படி என்னில் அனுமதித்திருக்கிறார் என்று ஒப்புக்கொடுத்தார். ஒப்புக்கொடுத்தலில் பெரிய ஆவிக்குரிய வெற்றி அடங்கி இருக்கிறது. ‘அந்தப்படி நான் பலவீனமாய் இருக்கும்போதே பலமுள்ளவனாய் இருக்கிறேன்‘ என்று பவுல் முடிக்கிறார்.