“ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்” (மத்தேயு 27:46).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த உலக வாழ்க்கையில் இந்த நேரத்தை நாம் சிந்திக்கும்பொழுது, முற்றிலும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத ஒன்றாய் இருக்கின்றது. தேவ குமாரனாக இருந்தாலும் ஒரு மனிதனாக இந்த உலகத்தில் தன்னைத் தாழ்த்தி ஒப்புக்கொடுத்தார். இந்த இடத்தில் இயேசு ஒரு மனிதனாக, பாவியின் ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டதின் நிமித்தமாக பாவத்தின் தண்டனையாக அவர் முற்றிலும் பிதாவினிடத்திலிருந்து துண்டிக்கப்பட்டார். பிதாவினால் முற்றிலும் கைவிடப்பட்டார்.  இந்தச் சம்பவம் மனிதர்களாகிய நமக்கு முற்றிலும் விளங்கிக்கொள்ளக் கூடாத ஒரு காரியமாய் இருக்கின்றது. பிதாவானவர் தம்முடைய சொந்தக் குமாரனைக் கைவிட்டார் என்ற காரியம் ஒரு பாவியைத் தேவன் எந்தளவுக்கு அருவருக்கிறார் என்பதையும், அவன் முற்றிலும் தேவனால் கைவிடப்பட்டு ஒரு பரிதாபமானநிலையில் வாழுகிறான் என்பதையும், இந்த உலகத்தில் தேவனுடைய கோபாக்கினை அவன் மேல் நிலைத்திருக்கிறது என்பதையும் இந்த வேளையில் சிந்திக்கும்பொழுது, மெய்யாலுமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு பாவியின் ஸ்தானத்தில் முழுமையாகப் பிதாவை விட்டு துண்டிக்கப்பட்டு ஒரு பரிதாபமான நிலையில் அவர் இவ்வாறு சொன்னக் வார்த்தைகள்தான் இவை. “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்.” நம்மை நேசிக்கின்ற அந்த நேசத்தின் நிமித்தமாக மாத்திரமே, இந்த ஒரு கொடுமையான சூழ்நிலையிலும் அவர் முற்றிலுமாகத் தன்னை உட்படுத்திக்கொண்டு, அவர் தம்முடைய அன்பை நம்மேல் வெளிப்படுத்தும் விதமாக பட்டப்பாடுகள் இது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே தேவனுக்கு நாம் எப்பொழுதும் உண்மையாய் வாழுவோம்.