“என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது” (சங்கீதம் 139:16).

ஒரு மனிதன் கருவில் உருவாகிற காரியத்தையும் தேவன் தம்முடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிறார் என்றால், அவருடைய ஞானம் எவ்வளவு பெரிது. இந்த உலகத்தில் நாம் சிந்திக்கக்கூடாத அநேக காரியங்களையும் தேவன் அறிந்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் எந்தவொரு காரியமும் அவருக்கு முன்பாக மறைக்கப்படுவதில்லை. அவருடைய புஸ்தகத்தில் நம்முடைய அனைத்துக் காரியங்களும் எழுதப்பட்டிருக்கிறது. கரு உருவாகும் நாள், வேளை உண்டு. அதைக் குறித்தும் தேவன் எழுதிவைத்திருக்கிறார். ஆகவே ஒரு மனிதனுடைய ஆரம்பமும் முடிவும் அவரே. நம்மைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறவர். நம்மைக் குறித்து எல்லாவற்றையும் திட்டமிட்டு தீர்மானித்திருக்கிறவர். இவ்விதமான ஒரு தேவனிடத்தில் நம்முடைய வாழ்க்கையை ஒப்புவித்து வாழுவதைப் போல பாதுகாப்பான வாழ்க்கைப் பயணம் நமக்கு உண்டா? அநேக வேளைகளில் நாம் நம் சுய ஞானத்தைச் சார்ந்து வாழுவதைப் போல ஆபத்தானது வேறொன்றுமில்லை. ஆனால் நம் கரு உருவாகும் நாளையும் அறிந்த தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம். தேவன் சகலத்தையும் நன்மையாக வழிநடத்துவார்.