“என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்” (சங்கீதம் 89:21).

ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் நம்முடைய பெலத்தினால் வாழ முயற்சிசெய்வது வேதத்திற்கு புறம்பானது. நாம் பாவத் தன்மையுள்ளவர்களாய் இருக்கிறோம். நன்மை செய்யவேண்டும் என்ற விருப்பம் உண்டு ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை என்று பவுல் தன்னைக் குறித்துச் சொல்கிறார். நம்முடைய சுய பெலம் ஞானம் நமக்கு உதவி செய்யாது என்பதை அறிந்துகொள்வோம். ஆனால் தேவாதி தேவன் சொல்லுகிறார், என் கை அவனோடே உறுதியாயிருக்கும் என்று. தேவன் தம்முடைய கையினால் நம்மை உறுதியாய் பற்றிக்கொண்டிருக்கிறார். இவ்விதமாக தேவன் நம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கும்போது மேலும் அவர் சொல்லுகிறார் என் புயம் அவனை பலப்படுத்தும். அருமையானவர்களே! தேவன் நம்மை பலப்படுத்துகிறார். ஆகவேதான் பவுல், என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு என்று சொல்லுகிறார். நாம் நம்முடைய பெலத்தைச் சார்ந்து வாழும்போது தோற்றுவிடுகிறோம். ஆனால் கர்த்தருடைய பெலத்தை விசுவாசத்தின் மூலமாகச் சார்ந்துகொள்ளும்போது நிச்சயமாக தேவன் நம்மில் மிகப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடும். அவர் நம்மை பெலப்படுத்துகிறவராய் இருக்கிற படியால் நாம் எல்லாவற்றிலும் வெற்றியுள்ளவர்களாய்க் காணப்படுவோம். தேவன் இந்த உலகத்தில் கிருபையாய்க் கொடுத்திருக்கிற சந்தோஷத்தோடும் சமாதானத்தோடும் வாழுகிற அருமையான வாழ்க்கையை நாம் கொண்டிருப்போம்.  ஆகவே ஒன்றை நாம் அறிந்துகொள்வோம். கர்த்தர் நம்மைப் பற்றியிருக்கும் பற்றுதல் உறுதியானது. அவருடைய புயம் என்னைப் பெலப்படுத்துகிறதாக இருக்கிறது.