“முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்” (ஏசாயா 46:9-10).

நம்முடைய வாழ்க்கையில் அநேக வேளைகளில் நம் சொந்த ஞானத்தைக் கொண்டு வாழப் பிரயாசப்படுகிறோம். இதுவே நம்முடைய வாழ்க்கையின் மிகப் பெரிய பிரச்சனை. ஆனால் இந்த சர்வ ஞானமுள்ள தேவனைச் சார்ந்து கொள்ளக் கற்றுக்கொள்ளுவோம். அதுவே விசுவாசம். தேவன் ஆபிரகாமிடத்தில் பேசும்போது, “அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்” (ஆதியாகமம் 15:13). இந்த தேவன் எல்லவற்றையும் அறிந்திருக்கிறவர். மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தேவனுடைய ஞானத்தைச் சார்ந்து வாழுவது. அவர் அறியாமல் நேரிடுவது ஒன்றுமில்லை. அடைக்கலான் குருவியும் அவருடைய சித்தமில்லாமல் கீழே விழுவதில்லை. நம்முடைய தலையிலுள்ள முடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது என்று வேதத்தில் பார்க்கிறோம். ஆகவே இந்த தேவனையும் அவருடைய ஞானத்தையும் சார்ந்து வாழ நாம் கற்றுக்கொள்ளுவோம். நம்முடைய வாழ்க்கையில் அநேக வேளைகளில் நாம் புரிந்துகொள்ளக் கூடாத சூழ்நிலைகளும் சம்பவங்களும் காணப்பட்டாலும், தேவனுடைய சர்வ ஞானத்தை நாம் சார்ந்து கொள்கிறவர்களாய் இருப்போம். தேவன் நம்முடைய வாழ்க்கையில் உன்னதமான திட்டத்தை வைத்திருக்கிறார். இந்த சர்வ ஞானமுள்ள கர்த்தரைச் சார்ந்துகொள்வதே விசுவாசம். நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற சவால்களும் எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமற்ற உணர்வும் அநேக வேளைகளில் நம் காலத்தின் பிரயோஜனத்தன்மையை அது பாதிக்கிறது. ஆனால் அதை நாம் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் சர்வ ஞானமுள்ள தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து  அவரைச் சார்ந்துகொள்வோமென்றால் நாம் சமாதானமுள்ளவர்களாய்க் காணப்படுவோம். தேவன் தாமே அவருடைய ஞானத்தை நாம் சார்ந்துகொள்ள நமக்குக் கிருபைச் செய்வாராக.