“நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” (யோவான் 15:8).

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கனிக்கொடுக்கிற வாழ்க்கை. இரண்டுவிதமான கனிகளைக் குறித்து வேதம் சொல்லுகிறது. ஒன்று ஆவிக்குரிய கனிகள். மற்றொன்று கிறிஸ்துவுக்காக நாம் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் கனிகள். நாம் இந்த இரண்டுவிதமான கனிகளையும் மிகுதியாய் கொடுக்கிறவர்களாய்க் காணப்படுவதே கிறிஸ்தவத்தின் அளவு. நாம் அதிக கனிகளை கொடுப்பதினால் இரண்டு காரியங்களைக் குறித்துப் பேசுகிறார். ஒன்று அதில் பிதா மகிமைப்படுவார். மற்றொன்று இயேசுவுக்கு சீஷராயிருப்போம். இயேசுவின் சீஷன் என்று அழைக்கப்படுவது இந்த உலகத்தின் எல்லா காரியங்களைக் காட்டிலும் மேன்மையானது. இந்த இரண்டு காரியங்கள் காணப்பட வேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கை மிகுந்த கனிக் கொடுக்கிறதாய் இருக்க வேண்டும். அநேகருடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய கனிகளல்ல, கசப்பான கனிகளையே கொடுக்கிறார்கள். கசப்பான கனிகள் என்பது தங்களுடைய வாழ்க்கையில் மாம்சத்துக்கேதுவான கனிகள். மாம்ச இச்சைக்கும் அழிவுக்கும் ஏதுவான கனிகள் (கலாத்தியர் 5:19-21). ஆனால் நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய கனிகள் இருக்குமானால், தேவன் கொடுக்கிற சந்தோஷமும் சமாதானமும் அநேகரை கிறிஸ்துவண்டை வழிநடத்தும்படியாக நிச்சயமாக காணப்படும்.