கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 18                       அற்புதங்கள்               யோவான் 12:26-38

“அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும்

அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை” (யோவான் 12 : 37)

    இன்றைய கிறிஸ்துவ போதனைகளின் மையமே அற்புதம்தான். எங்குப்பார்த்தாலும் அற்புதம், அற்புதம், அற்புதம். அற்புதக்கூட்டங்கள், அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள், அற்புத திருவிழா, அற்புதபெருவிழா என்று ஏகப்பட்ட விளம்பரங்கள். அருமையானவர்களே! வேதம் அற்புதத்தைப் பற்றியும் அதை எதிர்பார்ப்பவர்களைப் குறித்தும் என்ன சொல்லுகிறது என்பதை நாம் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். தேவன் இன்றைக்கு அற்புதங்களை செய்ய வல்லவராய் இருக்கிறார். என்னால் செய்யக் கூடாதக் காரியம் ஒன்றுண்டோ என்று தேவன் கேட்கிறார். தேவனால் எல்லாம் கூடும். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். ஆனால் தேவன் அற்புதங்களையும் கூட ஒரு நோக்கத்திற்கென்றே செய்கிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வருவதற்கு முன்பு ஏறக்குறைய 400 ஆண்டுகள் வேத சரித்திரத்தில் இருண்ட காலமாயிருந்தது. அந்நாட்களில் தேவனுடைய தீர்கத்தரிசிகளும் இல்லை, தேவ வார்த்தையும் இல்லை. அதன் பின்பு வந்த யோவான் ஸ்நானகன் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது? (யோவான் 10 : 41) ஏன்? தனக்கு பின்வரும் இயேசுவே தேவக்குமாரன் என்பதை நிருபிக்கும்படியாகதான். இயேசு செய்த அற்புதங்கள், அவரே மேசியா என்பதை வெளிப்படுத்துகிறது. ஆகவே இந்த அற்புதங்கள் அவரே தேவக்குமாரன் என்பதை தெளிவாக மக்களிடத்தில் விளங்கப்பண்ணும்படியாக இயேசுவால் செய்யப்பட்டன.

    நாம் பார்த்த பகுதியில் இந்த மக்கள் இயேசு செய்த அநேக அற்புதங்களைக் கண்டும் அவரை விசுவாசிக்கவில்லை. வெறும் அற்புதங்கள் செய்து மக்களை விசுவாசத்திற்குள் வழிநடத்த பிரயாசப்படுகிற எந்த ஊழியமும் தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றதல்ல. அன்றைக்கு இயேசு கடிந்துக் கொண்ட அதே கேள்வி இன்றும் பொருந்தும். நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள்.’ (யோவான் 4 : 48) வெறும் அற்புதக் கிறிஸ்தவர்களாக இருக்க கூடாது.