கிருபை சத்திய தின தியானம் 

பிப்ரவரி 21          நோக்கமாயிருக்கும் கர்த்தர்         சங் 101:1-8

      ‘என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்;’ (சங் 101:6).

      தேவன் வானத்தையும் பூமியையும் படைத்து சகலத்தையும் ஆளுகிற தேவனாக இருந்தும்,  அவர் மனிதனையும் நோக்கிப்பார்க்கிறவராக இருக்கிறார். இந்த வசனத்தின் முற்பகுதியில் ‘தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி’ (சங் 101:6) என்று சொல்லுகிறார். கர்த்தரோடு கூட நாம் தரித்திருக்கவும், அவரோடு நாம் ஐக்கியம் கொண்டிருக்கவும், நம்முடைய வாழ்க்கையில் அவர் எதிர்பார்க்கிறார். மேலும் அவர் நம்மேல் எப்பொழுதும் நோக்கமுள்ளவராகவே இருக்கிறார். ‘கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது’ (சங் 34:15) என்று சொல்லுகிறார்.     

      அவர் எப்பொழுதும் தம்முடைய மக்களைப் பாதுகாக்கவும், கருத்தாய் பராமரிக்கவும், அன்பு செலுத்துகிறவருமாக இருக்கிறார். மேலும் அவர்கள் கூப்பிடும் பொழுது கர்த்தர் செவிகொடுக்கிறவராக இருக்கிறார். அவர் தம் மக்களின் விண்ணப்பத்தை என்றைக்கும் தள்ளிவிடுகிறவர் அல்ல. இன்னும் ‘தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது’ (சங் 33:18-19) என்று தாவீது சொல்லுகிறார். தேவன் தம் மக்களை எப்பொழுதும் நோக்கிப்பார்த்து, அவர்களைப் பொல்லாத ஆபத்துகளில் இருந்து காக்கிறவராக இருக்கிறார்.

      மேலும் ‘அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடே கூடச் சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்’ (யோபு 36:7) என்று வேதம் சொல்லுகிறது.கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்யும்படியாக நம்மேல் நோக்கமாக இருக்கிறார் என்பதை வேதம் தெளிவாக நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. இதனை நாம் உணராமலேயே வாழுகிறோமா? அன்பானவர்களே, இந்த உலகம் நம் ஆவிக்குரிய கண்களை இருளாக்காதபடிக்கு, இந்த அன்புள்ள தேவனை விசுவாசித்துப் பற்றிக் கொள்ளுவோமாக.