கிருபை சத்திய தின தியானம்

மே 10                       கிறிஸ்துவின் சிந்தை              எபே 4 : 17 – 32

‘ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாக சொல்லி

எச்சரிக்கிறது என்னவெனில், மற்ற புறஜாதிகள் தங்கள் வீணான

சிந்தையிலே நடக்கிறது போல நீங்கள் இனி நடவாமலிருங்கள்’ (எபே 4:17 )

    இன்றைக்கு அநேகர் எச்சரிப்புகளை விரும்புகிறதில்லை. மனிதன் பொதுவாக இவ்விதமான சுபாவம் உள்ளவன். ஆனால் யார் இவ்விதமான எச்சரிப்புகளை ஏற்றுக்கொண்டு அதற்கு இணங்கிக்கொடுக்கிறார்களோ, அவர்கள் அதனால் பலவிதமான தீங்குகளுக்கும், பாவங்களுக்கும் விலக்கிகாக்கப்படுகிறார்கள். ஒரு கிறிஸ்தவன் அவ்விதமாகவே வாழவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது.

     நமது சிந்தை நம்மை ஆண்டு வழிநடத்துகிறது. ஆகவே அந்த சிந்தையை நாம் சரியான விதத்தில் காத்துக்கொள்வது மிக  அவசியமானது. புறஜாதிகள், அதாவது தேவனை அறியாத மக்களின் சிந்தை வீணானது. அது இவ்வுலகத்துக்குரியது, மாம்சத்துக்குரியது, அது மேலானதல்ல , ஆவிக்குரியதுமல்ல. ஆகவே அவைகளின்படி நாம் நடக்கக்கூடாது என்று பவுல் எச்சரிக்கிறார். அவைகள் பிரயோஜனமற்றவைகள். நீங்கள் தேவனை அறியாத காலத்தில் அவ்விதம் வாழ்ந்துவந்தீர்கள். ஆனால் தற்போது அவ்விதம் வாழகூடாது. ஒரு மனிதன் மறுபிறப்படையும்போது அவனுடைய சிந்தையும் புதுபிக்கப்படுகிறது. அவன் இரட்சிக்கபட்டேன் என்று சொல்லியும், தொடர்ந்து மாம்சசிந்தையிலேயே முற்றும் ஆளபட்டு வந்தால் அவன் இரட்சிக்கபட்டவன் அல்ல.

    ‘கிறிஸ்து இயேசுவிலுள்ள சிந்தையே உங்களிலும்  இருக்கக்கடவது’ (பிலி 2:5). ஆம்! நம்மில் கிறிஸ்துவை போன்ற தாழ்மையின் சிந்தையிருக்கவேண்டும். பெருமையின் சிந்தை நம்மை அழித்துவிடும். தாழ்மையின் சிந்தை கிறிஸ்துவை நம்மில் வெளிப்படுத்தும், நம்மை உயர்த்தும். மற்றவர்களை நேசிக்கும் கிறிஸ்துவின் சிந்தை நம்மில் இருக்கவேண்டும். தேவனை அறியாத நாட்களில் சுயத்தால் நிரம்பினவர்களாய் வாழ்ந்து வந்தோம். ஆனால் இப்போது அப்படிப்பட்ட சிந்தையை வெறுத்து மற்றவர்களை நேசிக்கிற சிந்தையைக் கொண்டிருப்போம். அன்பானவர்களே! உங்கள் சிந்தை எப்படிப்பட்டது?