கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 15       உருக்கமான இரக்கங்களால்  சேர்த்துக்கொள்வேன்      ஏசாயா 54:1-17

“இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான

இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்” (ஏசாயா 54:7).

       ஆண்டவர் ஒரு இமைப்பொழுது என்று சொல்லும்பொழுது, ஒரு கண் இமைக்கும்பொழுது அது எவ்வளவு நேரம் ஆகும் என்பதை யோசித்துப்பாருங்கள். இமைப்பொழுது தான் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் நம்மை கைவிடுவார். ஆகவே நம் வாழ்க்கையில் ஒருவேளை சில சமயங்களில், கர்த்தர் என்னைக் கைவிட்டார் என்று எண்ணி அதில் சோர்ந்துபோக வேண்டிய அவசியமில்லை. அது இமைப்பொழுதுதான். இன்னுமாக சங்கீதம் 30:5 –ல் “அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” என்று சொல்லுவதைப் வாசிக்கிறோம்.

       அருமையான சகோதரனே, சகோதரியே! உன்னுடைய வாழ்க்கையில் சோதனைகள் மத்தியில் கடந்து செல்லும்பொழுது, சோர்ந்துபோகாதே. தேவன் உன்னைக் கைவிடவில்லை. ஏனென்றால், உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன் என்று சொல்லுகிறார். உன்னுடைய வாழ்க்கையின்  அறிந்திருக்கிற அவர், நிச்சயமாக உன் வாழ்க்கையில் செயல்படுவார். உன்னுடைய வாழ்க்கையில் நீ தளர்ந்துபோன நிலையில் தொடர்ந்து இருக்காதே. அவர் செம்மையான வழிகளில் உன்னை வழிநடத்துவார் என்பதை மறந்துவிடாதே.

      ஏசாயா 40:11 –ல் “மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்” என்று சொல்லுகிறார். உன்னுடைய பெலவீனத்திலும், அறிவீனத்திலும் உன்னை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்கிற பாதையை கர்த்தர் அறிந்திருக்கிறார். ஆகவே நீ மனந்தளர வேண்டிய அவசியமில்லை. உன்னுடைய வாழ்க்கையில் கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய வல்லவர் என்பதை நீ அறிந்து கொள்ளவேண்டும். இன்னுமாக தேவன், உன்னுடைய வாழ்க்கையில் உன் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சொல்லுகிறார். உன்னுடைய சிறையிருப்பு எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் கர்த்தர் மாற்றிப்போடுவார். “உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்”(உபா 30:3). ஆகவே சோர்ந்து போகாமல் விசுவாசத்தோடே தைரியமாய் இரு.