கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 4           வசனத்தை தியானிப்பது         சங் 119 ; 145 – 152

உமது வசனத்தை தியானிக்கும்படி குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்’ ( சங்கீதம் 119 : 148 )

            வேத வசனத்தை தியானிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனும் செய்யவேண்டிய மிகமுக்கியமான ஆவிக்குரிய பயிற்சியாகும். நேரமில்லையென்று சொல்லப்படும் இந்த நாட்களில் வேத தியானம் அதிகமாக புறக்கணிக்கப்படுவதால் அநேகர் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருவதில்லை. உலகபிரகாரமான அநேக காரியங்களுக்கு அவர்கள் நேரத்தை அதிகம் செலவிடுகிறார்கள். ஆனால் வேத தியானத்திற்கு அதே அளவு நேரம் ஒதுக்குவதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் நேரமில்லை என்பதுதான். இது மெய்யான காரணம் என்று நாம் எடுத்துகொள்ளமுடியுமா? இல்லை. எந்த ஒரு மனிதனும் எனக்கு சாப்பிட நேரமில்லை, ஆகவே ஒருவாரமாக சாப்பிடவில்லை என்று சொல்லுவானா? சொல்லமாட்டான் அப்படியானால் ஏன் அதே அளவு ஆவிக்குரிய காரியங்களுக்கு அக்கரை செலுத்தக்கூடது.

            மேலே சொல்லப்பட்ட வசனத்தில் சங்கீதக்காரன், வசனத்தை தியானிக்கும்படி குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும் என்று சொல்லுகிறார். முதலாம் சங்கீதத்தில் கர்த்தருடைய வசனத்தை தியானிக்கிறவன் எவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது பாருங்கள். இன்று அநேகர் ஆசீர்வாதத்தை விரும்புகிறார்கள். ஆனால் தேவன் சொல்லும் ஆசீர்வாதத்தின் வழியை பின்பற்ற விரும்புவதில்லை. அன்பானவர்களே! சுலபமான ஆசீர்வாத போதகர்களை  நம்பி ஏமாந்து போகாதீர்கள்.

            கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.’ (சங்கீதம் 1 : 2, 3). அன்பானவர்களே! ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையை தியானிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தையை இருதயத்தில் காத்துவையுங்கள். தேவன் தம்முடைய வாக்கின்படி உங்களை ஆசீர்வதிப்பார்.