மார்ச் 9

“ஆகையால், ஏற்றக்காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1பேதுரு 5:6).

அநேக வேளைகளில் நாம் தேவனுடைய வேளைக்கும் காலத்திற்கும் காத்திருப்பதில்லை. நாம் ஜெபித்தவுடனே கிடைக்க வேண்டும் அல்லது நாம் விரும்புகிற வேளையில் அது நடக்க வேண்டும் என்பதான ஒரு அவசர உணர்வோடு  நம்முடைய வாழ்க்கையில் செயல்படுகிறோம். ஆனால் கர்த்தருடைய காலத்திற்கு காத்திருக்கிறவர்கள் நிச்சயமாக தேவனுடைய பெரிய காரியங்களைக் காண்பார்கள். மேலும் அவர்கள் அதிகமான வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கடந்துபோக மாட்டார்கள். அநேக தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய வேளைக்குக் காத்திருக்கத் தவறுவதினால், அநேக நன்மைகளை இழந்துபோவது மாத்திரமல்ல, அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்னடைவும் அடைகிறார்கள். ஒரு தேவ மனிதன் தேவனுடைய அறிவையும் ஞானத்தையும் சார்ந்திருக்கிறபடியால், கர்த்தர் எல்லாவற்றையும் நேர்த்தியாய்ச் செய்கிறவரும், ஏற்ற காலத்தில் நடப்பிக்கிறவருமாய் இருக்கிறபடியால், அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருப்பான். நம்முடைய வாழ்க்கையை எப்போதும் தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதே அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருப்பதாகும். நம்முடைய வாழ்க்கையின் எல்லாக் காரியங்களையும் எல்லாச் சூழ்நிலைகளையும் அவரிடத்தில் ஒப்புவிப்போமாக. இது நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான காரியமாய் இருப்பது அவசியம். வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளை நாம் சந்திக்கின்ற வேளையில், ஏன் இப்படி நடக்கின்றது என்று எண்ணுகிறோம். ஆனால் அதை தேவனுடைய கரத்தில் ஒப்புவித்து, அவருடைய வேளைக்காகக் காத்திருக்கும்பொழுது, ஆண்டவர் அதை அழகாக நேர்த்தியாகச் செய்து முடிப்பார். எனக்காக யாவற்றையும் செய்து முடிக்கிற என் தேவனாகிய கர்த்தர் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். அவர் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடத்துகிற தேவன். அவர் எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்திருக்கின்றார் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆகவே தேவனுடைய நேரத்திற்காக நாம் காத்திருப்பது அவசியம்.