கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 06              கண்டடையத்தக்க சமயம்           ஏசாயா 55:6-13

“கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்;

அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்” (ஏசாயா 55:6)

    இதை வாசிக்கும் நண்பரே! இதுவே எற்ற சமயம். நீ இப்பொழுதே அவரை தேடு என்று கர்த்தர் உன்னிடத்தில் சொல்லுகிறார். இந்த தருனம் கர்த்தர் உனக்கு  ஈவாக கொடுத்திருக்கும்போது தேவனைத் தேடு என்று ஆலோசனை சொல்லுகிறார். சாத்தான் எப்போதும் ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லுவான். ‘இல்லையென்றால் இதைவிட ஏற்ற நல்ல வேளை உனக்குப் பிறகு கிடைக்கும், அப்பொழுது நீ தேவனைத் தேடலாம். இப்பொழுது பல காரியங்கள் உனகுத் தடையாக இருக்கிறது. அவைகளை சரிசெய்துவிட்டு நீ தேவனை தேடலாம் ‘ என்று சொல்லுவான். ஆனால் தேவன் என்ன சொல்லுகிறார்? “இப்பொழுதே அனுகிரகக்காலம், இப்பொழுதே இரட்சனிய நாள்” (2 கொரி 6:2).

    அப்போஸ்தலர் நடபடிகள் 24:25ல் பேலிக்ஸ் என்ற மனிதன் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு ‘எனக்குச் சமயமான போது உன்னை அழைப்பிப்பேன்’ என்றான். அருமையானவர்களே! ஆம்! அவன் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தைக் குறித்து பவுல் சொல்லக்கேட்டான். ஆனால் ‘பிறகு’ என்று தள்ளிபோட்டான். அவனுடைய வாழ்வில் ‘பிறகு’ என்று சொன்னது நிறைவேறினதாக நாம் வேதத்தில் பார்ப்பதில்லை. வேதம் சொல்லுகிறது இப்பொழுதே என்று, அடுத்தமணி நேரத்தில் என்றுகூட சொல்லவில்லை. ஏன்? இதைக்காட்டிலும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் முக்கியமானது ஒன்றுமில்லை. உலகமுழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் உன் ஜீவனை நஷ்டபடுத்தினால் லாபமென்ன என்று தேவனுடைய வார்த்தை கேட்கிறது.

    “அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்”. தேவன் இப்பொழுது சமீபமாயிருக்கிறார். இது உனக்குக் கிருபையின் வேளை என்பதை மறவாதே. தேவனை நோக்கி ஜெபி. ‘கர்த்தாவே அடியேனை இரட்சியும். உமது கிருபை என்னைக் கடந்துப்போகாதிருப்பதாக’ என்று ஜெபிப்பாயானால் நிச்சயமாக தேவன் உன்னைச் சந்தித்து மாற்றுவார்..