அக்டோபர் 25                          

“பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” (லூக்கா 12:15)

    வேதத்தில் அநேக எச்சரிப்புகளைப் பார்க்கிறோம். ஏன் இந்த எச்சரிப்புகள்? ஆம்! உன் ஆத்துமாவுக்கு எதிரிடையான பல சோதனைகள், பல கண்ணிகளைக் கடந்துதான் உன் விசுவாசப் பாதையில் செல்லவேண்டும். பாதைகளில் கடந்து செல்லவேண்டிய குழிகள் பள்ளங்கள் இருக்குமானால் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை பார்ப்பீர்கள். அவைகள் அந்தக் குழிகளில் நாம் விழுந்துவிடாதப்படிக்கு, நம்முடைய நன்மைக்கென்று வைக்கப்பட்டிருக்கிற எச்சரிக்கைகள்.

     அவ்விதமாகவே நமது ஆத்துமாக்களின் பாதுகாப்பிற்காக சொல்லப்பட்டிருக்கிற எச்சரிப்புகளை நாம் கவனிக்க வேண்டும். எச்சரிப்புகளை புறக்கணிக்கிறவர்கள் அந்தக் குழிகளில் விழுவார்கள் என்பதை மறவாதே.

     இங்கே அவ்விதமான எச்சரிப்புதான் ‘பொருளாசை’ இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் இந்த பாவத்திலிருந்து விடுதலை அற்றவர்களாய் வாழ்கிறார்கள். ஏன் ஆண்டவர் ‘பொருளாசையைக்’ குறித்து எச்சரிக்கிறார்? இது எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறதென்று தேவன் எச்சரிக்கிறார். இது உன் ஆத்துமாவிற்கு எதிரான பாவம் நீ வெளியே நல்ல விசுவாசியாய் காணப்படுவாய். ஆனால் உண்மையில் உன் இருதயம் பொருளாசையைப் பற்றியிருக்கும் . பணக்காரனுக்குதான் பொருளாசை இருக்கும் என்று எண்ணவேண்டாம். பிச்சைகாரனுக்கும், ஏழைக்கும் இது இருக்கும். இது இருதயத்தின் பாவம்., இருதயத்தில் மறைந்திருக்கிற பாவம். இது வெளியில் செய்கைகள், பேச்சுக்கள் மூலம் வெளிப்படும். மனுஷனுடைய இருதயத்திலிருந்து ……….. பொருளாசையுகளும் ……… புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் (மாற்கு 7: 21-23)

     எலிசாவின் வேலைக்காரன் கேயாசி பொருளாசையைப் பின்பற்றி போனான். அவன் முடிவு என்னவாயிற்று? குஷ்டரோகம் பிடித்து வேலையிலிருந்து நீக்கிவிடப்பட்டான். பொருளாசைக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை (1கொரிந்தியர் 6:10)