“மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்” (சங்கீதம் 94:11).
மனிதனுடைய யோசனைகள் இந்த உலகத்துக்கு அடுத்தவைகளும் தனக்கென்று செல்வத்தையும் மதிப்பையும் சார்ந்ததாக இருக்கின்றன. ஆனால் வேதம் இவைகளையெல்லாம் வீண் என்றும், மாயை என்றும் சொல்லுகிறது. இவைகள் ஒன்றுக்கும் பிரயோஜனமற்றவைகள். அவைகள் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உண்மையான விதத்தில் உதவி செய்யாது. நமக்குத் தேவையானது தேவனுடைய யோசனைகள். அவருடைய வார்த்தையும் சத்தியமுமே. அவைகள் எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக, நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் ஒரு நித்திய வாழ்க்கைக்குரிய ஒரு அருமையான பாதையில் நம்மை வழிநடத்துகிறது. மனிதனுடைய யோசனைகள் இந்த உலகத்தில் முடிந்துவிடும். ஒருவேளை அவன் இந்த உலகத்தில் பல காரியங்களைச் சாதித்தாலும், அவைகள் அவன் நித்தியமான வாழ்க்கைக்குப் பிரயோஜனப்பட வில்லையென்றால் அதினால் என்ன பிரயோஜனம்? ஐஸ்வரியவான் இந்த உலகத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தான். ஆனால் அவன் நித்திய வாழ்க்கையில் நான் அக்கினியில் வேதனைப் படுகிறேனே என்று சொன்னான். நித்திய வாழ்க்கைக்கு ஏற்புடையதல்லாத எந்தவொரு யோசனையும் அது வீண் என்றே சொல்ல வேண்டும். அதினால் பிரயோஜனம் ஒன்றுமில்லை. நம்முடைய ஆத்துமாவை மாயையின் வழியாய் நடத்திச்சென்று நித்திய நரக ஆக்கினைக்குக் கொண்டுச் செல்லும்.