ஜனவரி 28                              

“இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்” (எசேக்கியல் 36:9).

      தேவன் உங்கள் பட்சத்தில் இருந்து உங்கள் மேல் கண்ணோக்கமாக இருப்பேன் என்று சொல்லுகிறார். ஆனால் நாம் தேவன் நம் பட்சத்தில் இருக்கிறார் என்று நம்புவதில்லை. நமக்கு நேரிடுகிற சூழ்நிலைகளைப் பார்க்கிறோம். நமக்கு எதிராக இருக்கிற பல காரியங்களைப் பார்த்து சோர்ந்துவிடுகிறோம். ஆனால் சர்வ ஏகாதிபத்தியத்தின் கர்த்தர் நம் பட்சத்தில் நம்மோடு கூட இருக்கிறார் என்பதான உறுதியை நாம் கொண்டிருக்க தவறிவிடுகிறோம். “இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31) என்று பவுல் எழுதுகிறார். தேவன் நம்பட்சத்தில் இருக்கும்பொழுது நமக்கு எதிரிடையான எந்தக் காரியமும் இருக்காது. நமக்கு விரோதமாக எழும்பும் காரியங்கள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நன்மைக்காகவே என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

      நாம் விதைக்கப்போடுவோம் என்று வேத வசனம் சொல்லுகிறது. “விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்” (சகரியா 8:12) என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்படியானால் இது எப்படி சாத்தியமாகும்? நாம் விதைக்கப்படுவதற்கு முன்னதாக பண்படுத்தப்பட வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்குப் பிரியமில்லாதக் காரியங்கள் நீக்கப்பட்டு (பண்படுத்தப்பட்டு), பிறகு நாம் விதைக்கப்படுவோம். அப்பொழுது நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்போம் என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்குப் பிரியமில்லாதக் காரியங்கள் இருக்கின்றதா? அவைகளை எடுத்துப் போடுவோம், அப்பொழுது பண்படுத்தப்படுவோம். பிறகு கர்த்தர் நாம் கனிக்கொடுக்கும் படியான வாழ்க்கையை நமக்கு கட்டளையிடுவார். அவை அநேகருக்கு பயனுள்ள வாழ்க்கையாகக் காணப்படும்.