“புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 4:5).

இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு காரியத்தைச் சொல்வதைப் பார்க்கிறோம். தேவன் நம் எல்லோருக்கும் 24 மணி நேரம் கொடுத்திருக்கிறார். ஒருவேளை அனேகருக்கு அதிகமான நேரம் இருந்தும் எந்த வேலையும் இல்லாமல் இருப்பதையும் பார்க்கிறோம் . ஒரு சிலருக்கு நேரம் மிகவும் நெருக்கமான சூழலில் இருக்கிறதை நாம் பார்க்கிறோம். ஆனால் இந்த காலத்தைப் பிரயோஜனம் படுத்திக்கொள்ளும்படியான காரியம் மிக முக்கியமானது. புறம்பாக இருக்கும் மக்களுக்கு முன்பாக ஞானத்தோடும் விவேகத்தோடும் நாம் நடப்பது மிக அவசியம். இன்றைக்கு உலக மக்கள் அதிகமான நேரங்களை எவ்விதமாக செலவிடுகிறார்கள் என்பதை  அறிந்திருக்கிறோம். அவர்கள் ஒன்று தங்களுடைய கையில் வைத்திருக்கிற ஆண்ட்ராய்ட் போன் மூலமாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவைகளுக்காக அதிகமான நேரங்களை செலவிடுகிறதைப் பார்க்கிறோம். ஆனால் இது உலக மக்களுக்கு உரிய ஒரு வாழ்க்கை முறையே அல்லாமல் கிறிஸ்தவர்களுக்கு அல்ல. நாம் ஞானமாய் நடப்பது மிக அவசியம்.  நம்முடைய காலங்களையும் நேரங்களையும் தேவையற்ற அனேக காரியங்கள்  திருடிக்கொள்ள எப்பொழுதும்  பிரயாசப்படும். நம்மை அறியாமலே அதிகமான நேரத்தை அதில் செலவிடும்படியான அபாயம் உண்டு. ஆகவே நாம் ஞானமாய் நடந்து காலத்தைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆவிக்குரிய காரியங்களுக்கு நம்முடைய வாழ்க்கையில்  முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது அவசியம். உலகப்பிரகாரமான காரியங்களில்  நமக்கு நேரம் மிக சுலபமாக செல்லக்கூடிய ஒரு காரியமாக இருக்கலாம். ஆவிக்குரிய காரியங்களில் சில சமயங்களில் கடினப்பட்டு செயல்படுவது போல   இருக்கலாம். ஆனாலும் ஆவிக்குரிய காரியங்களின் முக்கியத்துவத்தை நாம் மறந்து விடாமல் நம்முடைய காலங்களைக் கர்த்தருக்குள் பிரயோஜனப்படுத்திக் கொள்வோமாக. அதுவே நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும்.