அக்டோபர் 1
“நீங்கள் புறப்பட்டுபோய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து” (மத்தேயு 28:19)
இது ஆண்டவராகிய இயேசு, பிதாவினிடத்திற்குப் போகிறதற்கு முன்பாகக் கொடுத்த பிரதான கட்டளை. இன்றும், இந்த கட்டளை ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அநேகர் இது போதகருக்கு மட்டும்தான், நமக்கு இந்த வேலை இல்லை என்று எண்ணுவது தவறு. நீயும் இந்த கட்டளைக்குக் கீழ்ப்படிவதை தேவன் எதிர்பார்க்கிறார். இந்த மகா உன்னதப் பணியில் உனக்கும் பங்கு வேண்டும். சபையின் பிரதானமான, இந்த பணியில் நீயும் பங்குள்ளவனாகக் காணப்படுவது மிக மிக அவசியமானது, சபை எல்லாம் கவனித்துக்கொள்ளட்டும் என்று எண்ணுவது. நீ இந்த கட்டளைக்கு உன்னை ஒப்புக்கொடுக்காததைக் காட்டுகிறது. தேவன், ரட்சிப்பில் மனிதர்களைக் கருவியாக உபயோகப்படுத்துகிறார். இரட்சிக்கிறவர் தேவனே. தமது ஆவியானவரைக் கொண்டு ஒரு பாவியை இரட்சிக்கிறார். ஒரு பாவியின் இரட்சிப்பை வேதம் எவ்வளவு மேன்மையாகச் சொல்லுகிறது! ஒரு பாவி மனந்திரும்பும்பொழுது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் காணப்படும் என்று வேதம் சொல்லுகிறது. இவ்வித மகத்துவமான பணியில், தேவன் உன்னை இணைக்கிறதென்றால் அதைக்காட்டிலும் மேன்மையானது என்னவாய் இருக்கமுடியும்.
இந்த வசனத்தில் இன்னும் ஒரு பகுதியைப் பார்க்கிறோம். இன்றைக்கு அநேக சபைகளில் திடீர் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. சபைக்கு சில வாரங்கள் வந்துவிட்டால் ஞானஸ்நானம் கொடுக்கபடுவது தவறு. அவர்கள் வரும் காலம் மட்டுமல்ல, அவர்களின் ஆவிக்குரிய தன்மை நிருபிக்கப்படவேண்டியது மிக அவசியமானது. அவர்களை சீடர்ராக்கி ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். அவர்கள் இரட்சிக்கப்பட்டு இயேசுவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய வழிகளில் நடக்கிறவர்களாய் காணப்படவேண்டும். அதற்கு பின்புதான் ஞானஸ்நானம். அதுதான் தேவன் எதிர்பார்ப்பது. தேவனுடைய பணியை தேவனுடைய வார்த்தையின்படி செய்வோமாக.