“நான் உன்னை சிநேகித்தேன்” (ஏசாயா 43:4).

தேவன் நம்முடைய வாழ்க்கையில், நாம் பாவியாக இருக்கும் பொழுது நம்மில் அன்புகூர்ந்தார் என்று சொல்லப்படுகிற இந்த அன்பு கூருதல் மிகவும் மேன்மைக்குரியதாக இருக்கிறது. தேவனால் ஒரு பாவி நேசிக்கப்படுகிறது என்பது ஒரு அசாதாரணமான காரியம். நாம் எண்ணியும் பார்க்க முடியாத ஒரு காரியம். இந்த உலகத்தில் கெட்ட மனிதர்களை ஒருவரும் நேசிப்பதில்லை. அவர்களை உதாசீனப்படுத்துவதும் புறக்கணிக்கப்படுவதையுமே நாம் பார்க்கிறோம். ஆனால் இந்த இடத்தில் நாம் வாசிப்பது, அவர் நம்மை சிநேகிக்கிறார். இந்த சிநேகம் என்பது ஒரு ஆழமான  காரியம். இந்த அன்பு என்பது தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்த அன்பு. அந்த அளவுக்கு அவர் நேசிக்கிறார் என்று சொல்லும்பொழுது, ஒரு பாவியை இந்த அளவுக்கு தேவன் நேசிக்க முடியுமா? இது நமக்கு முற்றிலும் விளங்காத ஒரு காரியம். இவ்வளவாக நேசிக்கிற இந்த ஆண்டவருக்கு நாம் பிரியமாய் வாழ்வது எவ்வளவு முக்கியமான காரியம். இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்று வேதம் சொல்லுகிறது (யோவான் 3:16). அவருடைய அன்பின் அகலம் நீளம் ஆழம் உயரத்தைக் கண்டு கொள்ள முடியுமா? என்னுடைய வாழ்க்கையில் இவ்விதமான அளவில் அன்புகூர்ந்து இருப்பாரானால் அவருக்கு நான் முற்றுமாக அர்ப்பணித்து வாழ்வதைப் போல மிகச் சிறந்த காரியம் ஒன்றுமில்லை. அதே சமயத்தில் இவ்வளவாய் அன்பு கூர்ந்து இருக்கும் பொழுது அவர் என்னை எவ்விதமாக கைவிட்டு விட முடியும்? எவ்விதமாக என்னை வழியில் அவர் விட்டு விலகிப் போக முடியும்? மனிதன் பொதுவாக இன்றைக்கு அன்பு கூருகிறான். நாளைக்கு அதே மனிதன் நம்மை வெறுக்கிறான். எவ்வளவு சீக்கிரம் ஒரு மனிதனுடைய அன்பு தாழ்ச்சியடைந்து, ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. ஆனால் அவருடைய அன்பு என்பது அவ்விதமாக இல்லை. தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்க கூடிய அளவுக்கு அவருடைய அன்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவரில் நாம் நம்பிக்கை கொள்வதிலும், விசுவாசத்தில் வளருவதிலும் இன்னும் ஆழமாக செல்லும்படியாக கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக.