பிப்ரவரி 7          அன்பு              நீதி 10:1-32

“பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்” (நீதி 10:12).

      நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நமக்குள் பகையும், பகைமை உணர்வுகளும் இருக்கிறது. இவ்விதமான காரியங்கள் மாம்சத்தின் கிரியைகளே அல்லாமல் வேறொன்றும் இல்லை. பகை எப்பொழுதும் விரோதங்களை எழுப்புகிறதாய்க் காணப்படும். அது நம் வாழ்க்கையில் அழிவுக்கேதுவான ஒரு ஆற்றலாய் காணப்படும். “கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்” (நீதி 15:18). கோபக்காரன் எப்பொழுதும் பகை விரோதங்களை உள்ளாக கொண்டு அவன் சண்டையை எழுப்புகிறான். ஆனால் ‘அன்போ சகல பாவங்களையும் மூடும்’ என்று வேதம் சொல்லுகிறது. அன்பு எப்பொழுதும் பிறருடைய குற்றங்களை பெரிதுபடுத்தாமல், தன்னால் இயன்றமட்டும் இயேசு கிறிஸ்துவைப் போல மன்னிக்கிற தன்மையோடு அதை மூடுகிறதாக இருக்கும்.

      “குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்”(நீதி 17:9) என்றும் வேதம் சொல்லுகிறது. நாம் குற்றத்தை மூடும்பொழுது நாம் சினேகத்தை நாடுகிறவர்களாகக் காணப்படுகிறோம். ஆண்டவருக்குள்ளாக அமர்ந்த தன்மையை வெளிப்படுத்துகிறவர்களாகக் காணப்படுகிறோம். “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்” (1பேதுரு 4:8) என்று வேதம் சொல்லுகிறது. பகை, கோபம், விரோதம் பாவங்களை எழுப்பும். குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும். ஆனால் அன்பு பாவங்களை அமர்த்தி மூடி அதனுடைய விளைவுகளை மேலெழும்புவதைத் தடுத்துப் பாதுகாத்துக்கொள்ளும். ஆகவே நாம் பகையில் மேன்மை பாராட்டுகிறவர்களாக அல்ல, அன்பில் மேன்மை பாராட்டுகிறவர்களாக இருக்கவேண்டும். அவ்விதமான வாழ்க்கை கர்த்தருக்குப் பிரியமானதாகவும், பிறருக்கு மகிழ்ச்சி தருவதாகவும் காணப்படும். அந்த வாழ்க்கை கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.