“அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்” எபேசியர் 4:15

      நம்முடைய வாழ்க்கையில் சத்தியம் என்பது தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை. அதன்படி வாழ்க்கையை நடத்தக் கூடிய காரியம். இதில் நாம் மேன்மை பாராட்ட ஒன்றுமில்லை. தேவ மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய ஒன்று அவருடைய சத்தியம். அதை நாம் கைக்கொள்ள வேண்டும் என்பதை நிச்சயமாக அறிந்திருக்கிறோம். ஆனால் நாம் அதை எவ்விதமாக கைக்கொள்ள வேண்டும்? அன்புடன் கைக்கொள்ளும்படியாகக் காணப்படவேண்டும். நம் வாழ்க்கையில் அன்புக்கு புறம்பான அனைத்தையும் நீக்கிவிட்டு, அன்புடன் நாம் சத்தியத்தை கைக்கொள்ளும்படியாக தேவன் எதிர்பார்க்கிறார். “சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேதுரு 2:2) என்று பேதுரு எழுதுகிறார். ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தீமையான, எதிரான மாம்சத்தின் காரியங்களான துர்க்குணங்கள், வஞ்சகம், பொறாமை, புறம்கூருதல் மற்றும் இதற்கு இணையான எந்த ஒரு காரியமும் நம்மில் இருக்கக்கூடாது. ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் சத்தியத்தை பின்பற்றுவதற்கு தடையாக எதுவும் இருக்கக்கூடாது. சத்தியத்தை உண்மையான மனதுடனும், விருப்பத்தோடும் நாம் கைக் கொள்ளவேண்டும். அப்பொழுது நம்முடைய வாழ்க்கையில் மெய்யாலுமே சத்தியத்தின் அடிப்படையில் கிருபையின் வாழ்க்கையை அதிகமாக கட்டி எழுப்பும். மேலும் பேதுரு, “ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்” (1 பேதுரு 1:22) என்று சொல்லுகிறார். அன்பு, சத்தியம், கீழ்ப்படிதல் இவ்விதமான காரியங்களைக் கொண்ட கிறிஸ்தவ வாழ்க்கை நம்மில் காணப்படவேண்டும். அதில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.