பிப்ரவரி 17

 “பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்” (யோவான் 13:1).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு நிபந்தனையற்றது மாத்திரமல்ல, அந்த அன்பு ஒருக்காலும் மாறாதது. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து அன்புகூர்ந்த அதே அன்பையே கடைசி மட்டும் நம்மிடத்தில் வைத்திருக்கிறார். இதில் எந்த சந்தேகமுமில்லை. நான் பாவியாயிருக்கையில் இயேசு என்னில் அன்புகூர்ந்தார், ஆனால் நான் என்னுடைய வாழ்க்கையில் பாவம் செய்யும்பொழுதோ அவர் என்னைப் புறக்கணிக்கிறார் என்று நாம் தவறாக எண்ணிக்கொள்கிறோம். ஆனால் அப்படியல்ல. அவர் ஆரம்பத்தில் நிர்ப்பந்தமான ஒரு பாவியாய் இருந்தபொழுது எவ்வாறு என்னை நேசித்தாரோ அதேவிதமாகவே கடைசி மட்டும் என்னை நேசிக்கிறார் என்பதே வேதம் போதிக்கின்ற சத்தியம். மெய்தான், நான் தவறும்போது ஆண்டவர் என்னை சிட்சிப்பார். ஆனால் அவருடைய அன்பு ஒருக்காலும் மாறாது. அவருடைய அன்பு நிச்சயமாக கடைசி மட்டும் உண்டு. ஆனால் நாம் மாறிவிடுகிறோம். அநேக வேளைகளில் தேவனுடைய அன்பை மறந்தவர்களாக நாம் நம்முடைய வாழ்க்கையில் சோர்ந்துவிடுகிறோம், அல்லது அந்த அன்பில் நிலைத்திருப்பதில் நாம் தடுமாறுகின்றோம். ஆனால் ஆண்டவருடைய அன்பு ஒருக்காலும் மாறாது.  இந்த அன்பு எவ்வளவு மேலானது என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். இந்த அன்பைப் போல பெரிதான அன்பு வேறொன்றுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.