நவம்பர் 13

“அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும்” (எபேசியர் 3:19)

      தேவனுடைய அன்பானது மனிதனுடைய அறிவுக்கு அப்பாற்ப்பட்டது. சகலத்தையும் சிருஷ்டித்த தேவன், ஒரு பாவியை நேசிக்கும் அன்பை நம் ஒருவராலும் விளங்கிக்கொள்ள முடியாது. ஒருப்பாவி தேவனுக்கு முன்பாக அருவருப்பானவனும், தீட்டுப்பட்டவனும், சாபத்திற்கு உட்பட்டவனும் ஆவான். ஆனால் அந்த மனிதனை தேவன் அதிகமாய் நேசிக்கிறார் என்பது மனிதனுடைய ஞானத்திற்கு எட்டாத ஒன்றாகும். உன்னதத்தில் வாசம் செய்கிற பரிசுத்தமுள்ள தேவன், ஒரு பாவியில் அன்புகூர்ந்து அந்த அன்பின் கிரியையாய் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்து அவனை மீட்டுக்கொள்ளுகிறார். அந்த அன்பு மிகவும் ஆச்சரியமானது.

      “சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;” (எபேசியர் 3:18) என்று பவுல் சொல்லுகிறார். நம் அறிவுக்கெட்டாத அந்த அன்பை நாம் தியானிக்க தியானிக்க அதின் ஆழமும், உயரமும், அகலமும் இன்னதென்று நம்மால் அறிய முடியாது. ஆகவேதான் பவுல் “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது;” (2 கொரி 5:14) என்று சொல்லுகிறார். மேலும் “என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா 2:20) என்றும் சொல்லுகிறார். அன்பானவர்களே! நம் வாழ்க்கையில் தேவன் காட்டுகிற அன்பு, பொறுமை, நீடிய சாந்தமானது கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற ஜீவன். அந்த அன்பை இன்னுமாக புறக்கணிக்காதே. இயேசுவின் அன்பை ருசித்துப்பாருங்கள்.