மார்ச் 26              

“உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்”

பிலமோன்1:6

      இன்றைக்கு உலகப்பிரகாரமான மக்கள் இந்த உலகத்தில் அந்நியோந்நியம் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் இணைந்து அல்லது ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவுகளோடு வாழுகிற வாழ்க்கைமுறையைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அழிவுக்கு ஏதுவான அந்நியோந்நியம். அது ஆவிக்குரிய நன்மைக்கு ஏதுவான அந்நியோந்நியம் அல்ல. ஆனால் மெய்யான அந்நியோந்நியம் என்பது என்ன? தேவனுடைய ஜனங்கள் விசுவாசத்தின் அடிப்படையில் கொண்டிருக்கிற அந்நியோந்நியம். தேவனுடைய ஜனங்கள் விசுவாசத்தோடு ஒருவருக்கொருவர் கொண்டிருக்கிற ஐக்கியம். இது நம்பத்தகுந்த அந்நியோந்நியம். இது கிறிஸ்துவுக்குள்ளான அந்நியோந்நியமாக இருக்கிறது.

      இந்தக் காலங்களில் முக்கியமாக நாம் தேவனுடைய மக்களோடு கூட அந்நியோந்நியமான உறவுகள் கொண்டிருப்பதில் குறைந்தவர்களாய்க் காணப்படுகிறோம். ஆனால் மெய்யான தேவனுடைய ஜனங்கள் இந்தக் காரியத்தில் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக்கொள்வது மிக அவசியமானதாக இருக்கிறது. நாம் ஆதித் திருச்சபையில் எவ்விதமாக தேவனுடைய ஜனங்கள் அந்நியோந்நியத்தில் இருந்தார்கள் என்பதைக் குறித்து  பார்க்கிறோம்.

      ஆதித் திருச்சபையானது அருமையான அந்நியோந்நியத்தைக் கொண்டதாக இருந்தது. இன்றைக்கு சபைகளில் பெரும்பாலும் இந்த காரியம் குறைந்து போனதாக இருக்கிறது. இதற்கு காரணமென்ன? இன்றைக்கு மெய்யான இரட்சிப்பின் அனுபவத்தோடு கூடிய வாழுகிற மக்களின் எண்ணிக்கை சபைகளில் மிகக் குறைவு. வெறும் பெயர் அளவான கிறிஸ்தவ பக்தியின் மூலமாக நாம் அந்நியோந்நியத்தை வலுப்படுத்த முடியாது. இது விசுவாசத்தின் அந்நியோந்நியம். இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக ஏற்படும் அந்நியோந்நியத்தை அதிகமாக நாடுவோம். அது தேவனுக்குப் பிரியமானதாக இருக்கும்.