கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 16                     நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்             2 இரா 6:10-16

அதற்கு அவன்; பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப்

பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்” (2இரா 6:16)

     சீரியா இராஜா இஸ்ரவேலின்மேல் படையெடுத்து வெற்றி காண பல முறை முயற்ச்சிதான். அவன் எப்பொழுதெல்லாம் முயற்ச்சித்தானோ அப்பொழுதெல்லாம் அவனுடைய திட்டமானது இஸ்ரவேலின் இராஜாவுக்கு தெரிவிக்கப்பட்டதினால் திட்டம் முறியடிக்கப்பட்டது. இதற்கு காரணம் யார் என்று சீரியா ராஜா அறிந்த பொழுது, காரணமான எலிசாவை பிடிக்குபடி திட்டமிட்டான். இரவிலே எலிசா இருந்த பட்டணமானது முற்றுகையிடப்பட்டது. குதிரைகளைக் கொண்டும், இரதங்களைக்கொண்டும், பலத்த ரானுவத்தைக் கொண்டும் முற்றுகைப் போடப்பட்டது. ஒரு மனிதனைப் பிடிக்க ஒரு சேனையே கிளம்பிவிட்டது. இங்கு எலிசாவின் வேலைகாரனுடைய பயத்தைப் பார்க்கிறோம். தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ ராணுவமும் குதிரைகளும், இரதங்களும் பட்டனத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; ஐயோ, அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி என் ஆண்டவனே என்ன செய்வோம் என்றான். ( 2 இராஜ:15) எலிசா ஜெபித்த பொழுது, வேலைக்காரனின் கண்கள் திறக்கப்பட்டு, எலிசாவை சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

   தேவன் தம்முடைய மக்களை எவ்விதம் காக்கிறார் பாருங்கள். எலிசாவை மாத்திரமல்ல, அவருடைய பிள்ளைகள் அனைவரையும் தேவன் அனுதினமும் அவ்விதம் பாதுகாக்கிறார். “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” (சங் 34:7). எலிசாவின் வேலைக்காரன் தன் சரீரக் கண்களால் அக்கினிமயமான சேனையைப் பார்க்கமுடியவில்லை. அவனுடைய ஆவிக்குரிய கண்கள், விசுவாச கண்கள் திறக்கப்படவேண்டியிருந்தது. நீ தேவனுடைய பிள்ளையானால் உன்னை பாதுகாக்கும்படி தேவன் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுகிறார் என்பதைக்குறித்து நிச்சயமாய் இரு. உன்னுடைய பாதுகாப்பிற்காக மனிதனைத் தேடாதே. தேவனைத் தேடு.