ஆகஸ்ட் 3
“எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்த திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லோரும் எழுந்து நின்றார்கள்.” (நெகேமியா 8:5)
எஸ்றா நியாய பிரமானத்தில் தேறின வேதபாரகன். பாபிலோன் தேசத்திலிருந்த பெர்ஷிய ராஜாவின் ஆணையினால் யூத மக்கள் திரும்ப வந்து எருசலேமின் ஆலயத்தை கட்டினார்கள். முதலாவது அந்த யூத ஜனங்கள் வந்த போது அவர்களுடன் எஸ்றா வந்தார். பின்பு பாபிலோனுக்குத் திரும்பிச் சென்று மறுபடியும் ஏறக்குறைய 13 ஆண்டுகள் கழிந்து எருசலேமுக்கு வந்து கர்த்தருடைய ஆசாரியனாய் ஊழியம் செய்தார். நெகேமியாவைக் கொண்டு அலங்கம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையை நீங்கள் பார்க்க வேண்டும்.
முதலாவது அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை வாஞ்சித்தார்கள். ஜனங்கள் எல்லோரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்கு கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்” (நெகேமியா 8:1 ). இன்றைக்கு அநேகர் தேவனுடைய வார்த்தையை அவ்விதம் வாஞ்சிப்பதில்லை.
இரண்டாவது, அவர்கள் கவனமாக செவிகொடுத்தார்கள். “சகல ஜனங்களும் நியாய பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாகச் செவிகொடுத்தார்கள். (நெகேமியா 8:3) தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கும்போது நீ கவனமாய் செவிகொடுக்கவேண்டும். ஜாக்கிரதையாய் கவனத்தோடே செவிகொடுப்பாயானால் அது உனக்குப் பிரயோஜனமாக இருக்கும். இன்று அநேகர் ஏனோ தானோ என்று செவிகொடுப்பதால் பிரயோஜனப்படுவதில்லை.
மூன்றாவதாக, கர்த்தருடைய வார்த்தை “இது” என்ற கனத்தை கொண்டிருந்தார்கள், அழுது நின்றார்கள் என்று பார்க்கிறோம். கர்த்தருடைய வார்த்தையை நீ கனப்படுத்து. தேவன் உன்னைக் கனப்படுத்துவார். அதை பயபக்தியாக எண்ணி அதைப் பின்பற்று. தேவன் உன்னை உயர்த்துவார். நீ அந்த மக்களைப்போல தேவனுடைய வார்த்தையை அவருடையதாய் எண்ணுகிறாயா?