ஜனவரி 13 கர்த்தரின் வேதம் சங்கீதம் 138:1-8
“உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும்
உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்;
உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது
வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்” (சங்கீதம் 138:2).
சூரியன், சந்திரன், பூமி, நட்சத்திரங்கள், மிருக ஜீவன்கள், பரலோகத் தூதர்கள், மற்றும் மனிதர்கள் இவை எல்லாவற்றைப் பார்க்கிலும் தேவன் தம்முடைய வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார், மேன்மைப்படுத்தியிருக்கிறார். ஆகவேதான் தாவீது ராஜா “தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?” (சங் 56:4) என்று சொல்லுகிறார். அவருடைய வார்த்தையைப் புகழுவது மாத்திரமல்ல அவரின் வார்த்தையைப் பற்றிக்கொண்டு வாழுவதைப் போல இந்த உலகத்தில் மேன்மையானது வேறொன்றுமில்லை. இன்றைக்கு அநேகருடைய பிரச்சனை என்னவென்றால் கடவுளுடைய வார்த்தையின் மேல் தங்களுடைய வாழ்க்கையைக் கட்டுவதில் தவறிவிடுகிறார்கள்.
“கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்” (ஏசாயா 42:21) என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் வேதத்தை முக்கியப்படுத்தியிருக்கிறார். ஆனால் நாம் வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் தோல்விக்கும், வறட்சிக்கும், சோர்வுக்கும் அடிப்படைக் காரணம் தேவன் முக்கியப்படுத்தின வேதத்தை நாம் புறகணிப்பதே ஆகும். நம் வாழ்க்கையில் ஆத்தும ஆகாரமான கர்த்தருடைய வேதத்தைப் புறக்கணிக்கும் பொழுது வெற்றியுள்ள கிறிஸ்தவர்களாக வாழ முடியாது. “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மத்தேயு 24:35) என்று தேவன் சொல்லுகிறார். இங்கு தேவன் தம் வார்த்தையின் மகிமையை விவரிக்கிறார். இப்படியான வேதத்தை நாம் பற்றிக்கொண்டு நம் வாழ்க்கையை வேதத்தின் மேல் அஸ்திபாரம் போட்டு வாழுவோமாக. அப்பொழுது நாம் கர்த்தரில் மகிழ்ந்து களிகூருகிறவர்களாகக் காணப்படுவோம்.