கிருபை சத்திய தினதியானம் 

ஆகஸ்ட் 24               கர்த்தருடைய வார்த்தை             ஏசாயா 40:1-8

“நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும்

நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது” (ஏசாயா 40:8)

      இந்த உலகத்தில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய ஒன்று கருத்தருடைய வசனம் மாத்திரமே. இதற்கு காரணம் என்ன? ஏனெனில் இது தேவன் பேசின வசனம். இது தேவன் தம்மை, தம்முடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்தும் படியான அவருடைய வார்த்தை. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு வாழுவோமென்றால், நாமும் நிலைத்திருப்போம் என்பது உண்மையே. அநேக மக்கள் ஆவிக்குரிய அனுபவங்களையும் ஆவிக்குரிய உணர்சிகளையும் சார்ந்து வாழும்பொழுது, அவர்களுடைய வாழ்க்கையில் காரியங்கள் வித்தியாசமானதாக நடைபெறுவது போலக் காணப்படும். ஆனால் கர்த்தருடைய வார்த்தையை சார்ந்து வாழுக்கிற வாழ்க்கையே தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையாகக் காணப்படும்.

    மேலும் ” அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்”  (ஏசாயா 6:11) என்று தேவன் சொல்லுகிறார். வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுகிற தேவன் அவர். மனிதன் சூழ்நிலைகளுகேற்ப மாறிப்போவான், ஆனால் தேவனோ என்றும் மாறுவதில்லை. அது மாத்திரமல்ல என் வாயிலிருந்து புறப்படுகிற வசனம் வெறுமையாக என்னிடத்திற்கு திரும்பாது என்றும் சொல்லுகிறார் (ஏசாயா 55:11). ஆகவே கர்த்தருடைய வசனம் அவருடைய திட்டத்தை நிறைவேற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளாதே.

      ஆகவேதான் இயேசு கிறிஸ்துவானவர் “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மத் 24:35, மாற்கு 13:31) என்று கூறியிருப்பதை நாம் வாசிக்கிறோம். இந்த உலகத்திலே நமக்கு கொடுத்திருக்கிற விலையேறப்பெற்ற பொக்கிஷம் கர்த்தருடைய வார்த்தையே. அதை நாம் பற்றிக் கொள்ளுவோம். அந்த வார்த்தையின் பின்னணியில் தேவன் செயலாற்றுகிறார் என்பதை மறவாதே. மேலும் இயேசு சொல்லுகிறார் ” வேதவாக்கியமும் தவறாததாயிருக்க” (யோவான் 10:35) என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். தேவ வாக்கியம் ஒருகாலும் தவறாது. அருமையனாவர்களே நம் நிலை என்ன? தேவனுடைய வார்த்தையை அசட்டை பண்ணுகிறோமா? அப்படியானால் வரும் கோபத்திற்கு எப்படி தப்பித்துக் கொள்ளுவோம்?(ரோமர் 1:18). மனந்திரும்பி தேவனுடைய வார்த்தைக்கு அடிபணிவோமாக.