ஜூலை 9                   

“கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள்” (சங்கீதம் 92:13).

      தேவனுடைய ஆலயத்தை நேசிப்பவர்கள், அதாவது ஆலயத்தில் அனைத்து காரியங்களிலும் ஆர்வமாய் பங்குபெறுகிறவர்கள் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்படுவார்கள். தேவனுடைய ஆலயம் என்று சொல்லப்படும்பொழுது வெறும் கட்டிடத்தையல்ல, அதன் அனைத்து ஊழியங்களிலும் அக்கரையோடு ஈடுபடுவதைக்குறிக்கிறது. அநேகர் ஆலயத்திற்கு ஞாயிறு காலை சென்று வந்தால், அதுவே பெரிய காரியம் என்று எண்ணுகிறார்கள். ஆலயத்தில் நாட்டப்படுவது என்பது அதுவல்ல. ஆலயங்களில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் பங்கு பெறுவதை வாஞ்சிப்பது முக்கியம். அநேகர் ஆலயத்தில் நடைபெறும் வேத ஆராச்சிக்கூட்டங்களில், ஜெபகூடங்களில் கலந்துக்கொள்வது இல்லை, பெண்கள் ஜெப ஐக்கியங்களில் கலந்துக்கொண்டு ஜெபிக்கச் செல்வதில்லை. அதற்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்று வாழுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரமாட்டார்கள். ஆவிக்குரிய தேவையான போஷாக்கை அவர்கள் பெற்றுக்கொள்ள தவறுகிறார்கள். ஆகையால் ஆவிக்குரிய பலவீனர்களாய்க் காணப்படுகிறார்கள்.

      நீ ஆலயங்களில் ஒவ்வொரு கூட்டங்களிலும் கலந்துக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும். அவ்விதமானவர்களே கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள். அதில் வாஞ்சையாய் பங்கு பெற்று அநேக ஆவிக்குரிய நன்மைகளை பெறுகிறவர்களாய் இருப்பார்கள். அது மாத்திரமல்ல ஆலயத்தில் செய்யவேண்டிய அநேக பணிகள் உண்டு. அதை அற்பமாய் எண்ணிவிடாதீர்கள். கர்த்தருடைய நாமத்தினால் செய்யப்படும் ஒவ்வொரு வேலையையும் கர்த்தர் கனப்படுத்துகிறார். அதன் மூலம் தேவன் அவர்களுக்கு நன்மையை வழங்காமல் விடார். நீ இவ்விதமான காரியங்களில் பங்கு பெறத் தருணங்களும் வாய்ப்புகளும் இருக்குமானால் அதை சந்தோஷத்தோடே செய். தேவன் அதை கனப்படுத்துவார். சங்கீதக்காரன் “உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். (சங் 65:4) என்று சொல்லுகிறான்.