கிருபை சத்திய தின தியானம்

மார்ச் 8                       பராமரிக்கும் கர்த்தர்                சங் 121:1–8

     ‘கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;

அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்’ (சங்கீதம் 121:7).

     கர்த்தர் ஒரு சில தீங்குக்கு மட்டும் உன்னை விலக்கிக் காப்பவராக அல்ல, எல்லாவிதமான தீங்குக்கும் உன்னை விலக்கிக் காப்பவராக இருக்கிறார். நம்மைச் சுற்றிலும் ஏராளமான தீங்குகள் பரவிக்கிடக்கின்றன. ஆனால் தேவன் அதிலிருந்து நம்மைப் பாதுகாத்து நமக்கு அரணாக இருக்கிறார். ஆகவேதான் வேதம்: ‘எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்’ (சங் 91:9–11) சொல்லுகிறது.

கர்த்தரை அரணாகக் கொண்டிருக்கிற ஜனங்களுக்கு பொல்லாப்பு நேரிடாது. அவர் தம்முடைய தூதர்களைக் கொண்டு உன்னை பாதுகாப்பார். மேலுமாக, ‘நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்’ (நீதி 12:21) என்று வேதம் சொல்லுகிறது. இந்த உலக மனிதன், கர்த்தர் யாரென்பதை உணராதவன். அவனுடைய வாழ்க்கையில் அநேக தீமைகளைச் சந்திப்பான். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஒருகேடும் வராது. தேவன் நம்முடைய ஒவ்வொரு செயலையும் அறிந்தவர். அவருடைய அனுமதியில்லாமல் நமக்கு ஒரு தீங்கும் நேரிடாது. அவர் உன் ஆத்துமாவின் தேவையை அறிந்தவர். அவர் நம் ஆத்துமாவைக் காக்கிற தேவன். நம்முடைய ஆத்துமாவிற்கு இரட்சிப்பைக் கொடுக்கிற கர்த்தர் அவர். நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம், ஆனால் அது ஒருக்காலும் அவனை அழிக்காது.