கிருபை சத்திய தின தியானம்

பிப்ரவரி 9              வழிநடத்தும் தேவன்        ஏசாயா 58:1-14

      ‘கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில்

உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்;

நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும்,

வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்’ (ஏசாயா 58:11).

      மகா வறட்சியான காலங்களிலும் உன் ஆத்துமாவை யார் திருப்திப்படுத்தக்கூடும்? அநேக சமயங்களில் நம் வாழ்க்கையில் சந்திக்கும்படியான எதிர்மாறான சூழ்நிலைகள் நம்மை அதைரியப்படுத்தவும், நம்முடைய வாழ்க்கையில் பயத்தை ஏற்படுத்தவும் நம்பிக்கையின்மைக்குள் கொண்டு செல்லவும் இருக்கிறதாக காணப்படுகிறது. ஆனால் தேவன் ஒருவரே நம் ஆத்துமாவை திருப்தியாக்க முடியும் என்பதை நினைவில் கொள். அநேக மக்கள் தங்கள் வாழ்க்கையில் கொண்டிருக்கிற பொருள்களின் மூலமாக, அல்லது உலகப்பிரகாரமான பல காரியங்கள் மூலமாக தங்களுடைய ஆத்துமாவை திருப்திப்படுத்தப் பிரயாசப்படுகிறார்கள். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் அவைகள் ஒருக்காலும் திருப்தி செய்ய முடியாது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

      இன்னுமாக சங்கீதம் 34:9-ல் ‘கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை’ என்று சொல்லப்படுகிறது. கர்த்தருக்கேற்ற பயம் நம் வாழ்க்கையில் தேவை. கர்த்தருடைய வார்த்தை இவ்விதமாகச் சொல்லுகிறது என்ற ஒரு தெய்வீகப் பயத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு நாம் இருக்கும் பொழுது, வேதம் சொல்லுகிறது, ‘நமக்கு குறைவில்லை’ (சங்கீதம் 34:10). ஆகவே நாம் கர்த்தருக்கு பயந்து, நம்முடைய ஆத்துமாவின் நன்மையை கர்த்தர் மாத்திரமே திருப்திப்படுத்தக் கூடும் என்று அவரை கிட்டிச்சேர்வோமாக. அப்பொழுது நிச்சயமாக நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீர் ஊற்றைப்போலவும் காணப்படுவோம்.

      இன்னுமாக கர்த்தர், ‘நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்’ (ஓசியா 13:5) என்று சொல்லுகிறார். உன்னுடைய வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தர் உன்னை தெரிந்து கொண்டிருக்கிறார். ஆகவே இந்த சூழ்நிலையிலும் உன்னை வழிநடத்த அவர் ஒருவரால் மாத்திரமே முடியும் என்பதை நீ அறிந்துகொள். கர்த்தர் நிச்சயமாக உன்னுடைய எவ்வித சூழ்நிலையிலும் உன்னை வழிநடத்த வல்லவரும், போதுமானவராக இருக்கிறார்.