ஜூன் 16
“நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்” (ஆதி 46:3).
இங்கு யாக்கோபை தேவன், வாக்குத்தத்தம் பண்ணின இடத்திலிருந்து எகிப்திற்குப் போக சொல்லுகிறார். அதுமட்டுமல்ல, அங்கு அவனை பெரிய ஜாதியாக்குவேன் என்று சொல்லுகிறார். இதே தேவன் யாக்கோபுக்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, அவன் வாழ்ந்து வந்த கானான் தேசத்தை அவனுக்கும், அவன் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணினார். “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்” (ஆதி 28:13) என்று சொல்லியிருந்தார். ஆனால் இப்பொழுதோ எகிப்திற்கு போக பயப்பட வேண்டாம் என்று சொல்லுகிறார். ஒருசில சமயங்களில் கர்த்தர் நம்மை வழிநடத்துகிற சூழ்நிலையைக் கண்டு குழப்பமடைகிறவர்களாக காணப்படுகிறோம். ஆனால் நாம் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.
நம் வாழ்க்கையில் ஆரம்பம் முதல் கடைசிவரை எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவன் அவர்’, அவர் நம்மை வழிநடத்துகிற பாதையில் நாம் தைரியமாகச் செல்லலாம். அவர் நம் பட்சத்தில் இருக்கும்பொழுது நாம் ஏன் பயப்படவேண்டும்? “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று கர்த்தர் சொல்லுகிறார். இவ்வளவு மகத்துமான வாக்குத்தத்தங்களை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் பொழுது, நாம் அவருடைய வழிநடத்துதலில் சிறிதும் சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் உண்மையுள்ளவர். மனம் மாற அவர் மனுஷனல்ல. மனிதன் மாறிப்போகிறவன். ஆனால் தேவன் என்றும் உண்மையுள்ளவர். அந்த தேவனை நீ சார்ந்து வாழுகிற நபரா?