ஜனவரி 2          கர்த்தருடைய வேதத்தின்படி           சங்கீதம் 119:1-16

“கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற

உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்” (சங்கீதம் 119:1).

      கர்த்தருடைய வேதமானது ஆசீர்வாதத்தின் வழியை நமக்குக் காட்டுகிறதாக இருக்கிறது. நம் வாழ்க்கையில் எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்பட்ட நபராக வாழ விரும்புகிறோம். அந்த வழியை நாம் கண்டறிந்திருக்கிறோமா? இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் வேதம் அவ்விதமான வழியை நமக்குக் காட்டுகிறதாக இருக்கிறது. இந்த 119 வது சங்கீதம் முதலாவது வசனம் நாம் பாக்கியவான்களாக இருப்பதற்கான வழியைப் போதிக்கிறது. வேதம் கர்த்தருடைய புத்தகம். வேதத்தில் கர்த்தருடைய சத்தத்தை நாம் கேட்க முடியும். கர்த்தர் மனிதனோடு இன்றைக்கும் பேசும்படியான ஒரு வழியாக வேதம் மட்டுமே இருக்கிறது. ஆகவே வேதமானது மனிதனுடைய புத்தகமல்ல. மனிதனால் அல்லது மனிதனுடைய சிந்தையினால் எழுதப்பட்ட புத்தகமுமல்ல.

      பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தவான்களைக் கொண்டு எழுதின புத்தகம் தான் இந்த வேத புத்தகம். ஆகவே நாம் இந்த வேதத்தைக் கிட்டிச் சேரும்பொழுது இது தேவனுடைய புத்தகம் தேவனுடைய சத்தம் என்கிற உணர்வோடு, பயபக்தியோடு வரவேண்டும். இவ்விதமாக வேதத்தை வாசித்து வாழ்க்கையில் கடைபிடிக்கும் மனிதர்களை உத்தம மார்க்கத்தார் என்று வேதம் சொல்லுகிறது. அன்பானவர்களே! மெய்யான ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வேண்டுமெனில் கர்த்தருடைய வேதத்தை வாசித்து அதன்படி உத்தமமாய் நடக்க பழக வேண்டும். வேதத்திற்கு புறம்பான காரியங்களை நாம் செய்யும் பொழுது ஒருபோதும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை  சுதந்தரித்துக் கொள்ள முடியாது. இன்றைக்கு அநேகர் வேதத்தைத் தவறாக போதிப்பதும் அதைக் கேட்டு தவறாக பின்பற்றுகிற மக்கள் கூட்டங்களும் ஏராளம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இந்த வேதம் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வேதம் நமக்குப் போதும். ஆகவேதான் வேதம் ‘கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்’ என்று சொல்லுகிறது.