நவம்பர் 1           

      “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்” (சங்கீதம் 31:21).

      இந்த வசனத்தில் சங்கீதக்காரன் “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணுகிறார்” என்று சொல்லுகிறார். அரணான நகரம் எது? தேவனுடைய பாதுகாப்பில் இருப்பதே அரணான நகரம். தேவனுடைய சித்தப்படி நம் வாழ்க்கை காணப்படுவதே நமக்கு அரண். இன்றைக்கு அநேகர் தங்களின் சுய வழியிலும், சுய சித்தத்திலும் போகும் பொழுது, அவர்கள் தங்களை அரணான நகரத்திற்கு வெளியே புறம்பாக்கிக் கொள்ளுகிறார்கள். நாம் கர்த்தருடைய சித்தப்படி வாழும்பொழுது, அவர் தம் கிருபையின் மூலம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகிறார். ஆகவேதான் சங்கீதக்காரன் கர்த்தருக்கு நன்றி செலுத்துவதைப் பார்க்கிறோம். நீ அரணான அல்லது பாதுகாப்பான நகரத்தில் வாழுகிற ஒரு நபரா? உன் வாழ்க்கையானது கர்த்தரால் அங்கீகரிக்கக்கூடிய விதத்தில் காணப்படுகின்றதா?

      கர்த்தர் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப் பண்ணுகிறவர். ஒரு மெய்யான தேவப்பிள்ளையின் வாழ்க்கையில் அவன் கடந்து போகிற ஒவ்வொரு சூழ்நிலையையும், தேவன் அதிசயமாக கடக்கப்பண்ணுகிறார். ஒருவேளை அநேக சமயங்களில் அவன் நினைப்பதற்கு மாறாக நடந்தாலும், தேவன் அவனை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார். “கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது” (சங் 98:1). நாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழும்பொழுது மாத்திரமே தேவன் அதிசயங்களைச் செய்கிறவராக இருக்கிறார். நாம் விரும்புகிற வண்ணம் அவர் காரியங்களை நடப்பிக்கிறவர் அல்ல. நாம் விசுவாசத்தில் வளரும்போது, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் கர்த்தரின் கரம் நம்மோடு இருப்பதை உணரமுடியும்.