ஜனவரி 19 கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார் செப்பனியா 3:14–20
“உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர்,
அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து,
தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்;
அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப் 3:17).
அன்பானவர்களே! இந்த வசனம் நம் வாழ்க்கையில் உண்மையானதாக காணப்படட்டும். தேவன் மெய்யாலுமே நம் நடுவில் இருக்கிறார். அவர் நம் வாழ்க்கையின் மையத்தில் காணப்படும் பொழுது நிச்சயமாக மிகப் பெரிய காரியங்களை செய்பவராக இருக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளை இரட்சிக்கிறவராக இருக்கிறார். “கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்” (எண் 14:8). இது இஸ்ரவேல் மக்களுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதியாகும். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு எப்பொழுதும் நன்மையானதைச் செய்யவே பிரியமுள்ளவராக இருக்கிறார்.
நம் வாழ்க்கையிலும் தேவன் உன்னதமான காரியங்களைச் செய்யச் வல்லவராக இருக்கிறார். அதற்கு நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லா காரியங்களிலும் அவரையே சார்ந்திருக்க வேண்டும். கர்த்தர் நம் வாழ்க்கையின் மையமாக காணப்படும் பொழுது நாம் எந்தவொரு சூழ்நிலையிலும் கைவிடப்பட்டவர்களாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. “நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்” (ஏசாயா 62:4). நாம் இவ்வளவு நாட்களாக கைவிடப்பட்டவர்களாக எண்ணித் துக்கத்துடன் வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால் தேவன் நம் வாழ்க்கைக் கட்டப்படும் என்று சொல்லுகிறார். ஆகவே நாம் தளரவேண்டிய அவசியமில்லை. “அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்” (செப் 3:16) என்று வேதம் சொல்லுகிறது.