‘கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை, தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்’ (நாகூம் 1:7).
‘கர்த்தர் நல்லவர்’ என்ற வார்த்தை உன்னை அதிகமாகத் தேற்றட்டும். தேவனை அறியாத அசீரிய சாம்ராஜ்ஜியத்தின் மக்கள் தேவனால் தண்டனைக் குட்படுத்தப்பட்டார்கள். நினிவே பட்டணம் அழிக்கப்படுவதற்கு முன் இந்த புத்தகம் நாகூம் தீர்க்கத்தரிசியினால் எழுதப்பட்டது. தேவனை அறியாத இந்த மக்களின் நிலைமை பரிதாபமாயிருந்தது. தண்டணைக்குட்படுத்தப்பட்டார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் அப்படியல்ல. அவர் நல்லவராயிருக்கிறார். ‘கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.’ என்று தாவீது சொல்லுகிறார். கர்த்தர் நல்லவர் என்பது உன் மனதில் ஆழமாக பதியட்டும். அப்பொழுது நம்முடைய நெருக்கமான காலங்களில் ஏன் எனக்கு தேவன் இவ்விதம் செய்தார் என்று எண்ணித் தேவனைக்குறித்து கடினமாக எண்ணமாட்டோம்.
வாழ்க்கையின் இக்கட்டான நேரங்களை நாம் அநேக சமயங்களில் கடந்து போகிறோம். தேவனை அறியாதவர்களுக்கு மாத்திரமல்ல தேவனை அறிந்த நமக்கும் அவ்விதம் நேரிடுகிறது. ஆனால் தேவனை அறிந்தவர்களுக்கு இவ்விதகாலங்களில் தேவன் அவர்களுக்கு அரணான கோட்டையாக இருக்கிறார். ஆம்! தாவீது சங்கீதத்தில் தேவனை அவ்விதம் சொல்லுகிறார். ‘கர்த்தர் என் கன்மலையும் என் கோட்டையும் …… என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.’ (சங் 18 : 2 ). நீ இக்கட்டுக் காலத்தில் பாதுகாப்பாய் இருப்பாய். நீ அது கடந்து போகுமட்டுமாக தேவனுடைய அரவணைப்பில் இருப்பாய். எவ்வளவு பெரிய நம்பிக்கை பாருங்கள்.
மேலும் கர்த்தர் ‘தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்! அவர் உன்னை அறிந்திருக்கிறார். நீ அவர் பேரில் வைத்திருக்கிற நம்பிக்கையை அறிந்திருக்கிறார். உன்னை வெட்கப்பட்டுப் போகவிடார். அவர் உன்னைத் தெரிந்திருக்கிறார். மேலும் அவர் அறியாமலும் இது உனக்கு நேரிடவில்லை. சகலத்தையும் முடிவில் நன்மையாகச் செய்துமுடிப்பார். தேவன் உன்னை விடுவிக்கும் நாளிலே நீ தேவனை மகிமைப்படுத்துவாய்.