கிருபை சத்திய தின தியானம்

மே 8                   கர்த்தாவே இரங்கும்         ஏசா 33 :1 – 10

‘கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்;

தேவரீர் காலையில் அவர்கள் புயமும்

இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.’ (ஏசாயா 33 : 2)

     எவ்வளவு அழகான ஜெபம் இது. அவர்களுடைய உண்மையான தேவையை உணர்ந்து தேவனுக்கு முன்பாகத் தாழ்த்தி ஏறெடுக்கும் ஜெபம். ‘இரங்கும்’ என்று வேண்டுதல் செய்வது, தாழ்மையான ஜெபம். மேலான பதிலை தேவனிடத்திலிருந்து கொண்டுவரும். நம்முடைய முடியாமையையும், தகுதியின்மையையும் ஒத்துக்கொண்டு இவ்விதம் தேவனிடத்தில் வருவது அதிக மேன்மையானது.

   மேலும் தேவனுக்காக காத்திருக்கிறோம் என்றும் ஜெபிக்கிறார்கள். அநேகர் தேவனுக்காக காத்திருப்பதை விரும்புவதில்லை. பிரச்சனை என்று வந்துவிட்டால் அதற்கு எவ்வளவு சீக்கிரம் பரிகாரம் பெறமுடியும் என்றுதான் பார்க்கிறார்களே ஒழிய, அது சரியான முறையா என்பதை யோசிப்பதில்லை. ஆகவே தீர்வுகான அவசரப்பட்டு தேவனில்லாத வழிகளில் செயல்படும்போது இன்னும் அதிகமான சிக்கலில் மாட்டிக்கொள்ளுகிறார்கள். அன்பான சகோதரனே! சகோதரியே! தேவனுக்குக் காத்திரு. அப்படியென்றால் என்ன? உன்னுடைய காரியத்தை தேவனிடத்தில் எடுத்துச் செல் அவரிடம் ஜெபி. தொடர்ந்து ஜெபி. விட்டுவிடாதே. கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.’ (சங்கீதம் 40 : 1 ) காத்திருத்தலுக்கு பொறுமை மிக அவசியம். அப்படி பொறுமையுடன் காத்திருக்கும்போது சங்கீதக்காரனின் அனுபவம் நம்முடையதாகும். நிச்சயமாய் நம்முடைய கூப்பிடுதலைக் கேட்பார். தேவன் பாராபட்சமுள்ளவர் அல்ல.

   மேலும் ‘நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை’ (ஏசாயா 49 : 23) என்று தேவன் சொல்லுகிறார் ‘நான் தேவாதி தேவன், சர்வவல்லமையும் சார்வ ஞானமுள்ளவர். சகலத்தையும் ஆண்டு நடத்துகிறவர். எனக்கு காத்திருக்கும்போது நீ வெட்கப்படுவதில்லை.’ மனிதன் இவ்விதம் சொல்லக்கூடுமா? முடியாது ஆகவே தேவனையே எப்போதும் சார்ந்துக்கொள். அவரை நோக்கி கூப்பிடு, காத்திரு. தேவனுடைய பிள்ளைகள், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எவ்வளவு உண்மையானவைகள் என்பதை அறிந்திருக்கிறார்கள்.