கிருபை சத்திய தினதியானம்

மார்ச் 1                       பெலப்படுத்துகிற கர்த்தர்          யோவான் 6:22-59

“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37).

      நாம் இயேசு கிறிஸ்துவை கிட்டிச் சேரும்பொழுது அவர் நம்மை தள்ளிவிடுவதில்லை. நம்முடைய விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து, நம்முடைய பாரங்களை அறிந்தவராக நமக்கு உதவி செய்கிறவராக இருக்கிறார். ஆகவே நாம் மனிதரிடத்தில் செல்வது பிரயோஜனமற்றது. மனிதனை நம்புவதும், அவனை நம்பி வாழுவதும் வீண். நம்மை ஒருக்காலும் புறம்பாக தள்ளாத கிறிஸ்துவினிடத்தில் நாம் கிட்டிச் சேரும்பொழுது, அவர் நிச்சயமாக நமக்கு செவி கொடுக்கிறவராக, ஏற்ற வழியில் நம்மை வழிநடத்துகிறவராக இருக்கிறார்.

    “நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்” (ஏசாயா 41:9) என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் நம்மை மன உருக்கத்தோடு பார்ப்பதின் நிமித்தமாக, அவர் உன்னைப்பார்த்து, “நீ என் தாசன்” என்று சொல்லுகிறார். நம் வாழ்க்கையில் நாம் கர்த்தருக்கு பிரியமானதை செய்யும்பொழுதும், கர்த்தருக்கு பிரியமானதை தெரிவு செய்யும்பொழுதும் அவர் இருதயத்திற்கு நெருக்கமுள்ளவர்களாக காணப்படுவோம்.

      “அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்” (ஏசாயா 42:3) என்று தேவன் சொல்லுகிறார். நம் வாழ்க்கையில் நெரிந்த நாணலைப் போல இருக்கலாம். அநேக சமயங்களில் நம்முடைய பக்தியும் கூட மங்கி எரிகிற திரியைப் போலக் காணப்படலாம். ஆனாலும் கர்த்தர் நம்மை கைவிட்டுவிடமாட்டார். நம் வாழ்க்கையில் அதிலிருந்து மீண்டு வரும்படியாக, பிரகாசிப்பிக்கும் படியாக உதவி செய்கிறார். ஆகவே நாம் தேவன் பக்கமாக திரும்புவோம், அவர் நிச்சயமாக நம்மை ஒருக்காலும் புறம்பே தள்ளமாட்டார். அவருடைய அன்பு அநாதி சிநேகத்தால் நிறைந்தது. தம்முடைய சித்தப்படி நமக்கு இரங்கி, நமக்கு எது தேவை என்பதை அறிந்து, அதை ஏற்றவேளையிலே கொடுக்கிறவராக இருக்கிறார். அதுவே நமக்கு நன்மையானதும், நம்முடைய ஆத்துமாவிற்கு பிரயோஜனமானதுமாகவும் இருக்கும்.