“அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது” (லூக்கா 19:41).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எருசலேம் பட்டனத்திற்கு சமீபமாய் வந்தபொழுது அவர் கண்ணீர்விட்டார். இந்த தேவக் குமாரனின் மேலான அன்பைக் குறித்து நாம் பார்க்கிறோம். அந்த மக்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பையும் அழைப்பையும் புறக்கணித்துவிட்டார்கள். அந்த மக்களின் எதிர்காலம் எவ்விதமாக இருக்கும் என்பதை அவர் அறிந்தபொழுது ஆண்டவர் மனதுருகுகிறார். மேலும் 42ஆம் வசனத்தில் ‘உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.’  அருமையானவர்களே நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் இல்லையென்றால் நம்முடைய எதிர்காலம் இருண்டதாய் காணப்படும். தேவனுடையக் கிருபையை நாம் புறக்கணிக்கிற வாழ்க்கையை நாம் எண்ணிப்பார்க்கும்பொழுது பயப்பட வேண்டியதாக இருக்கிறது. சமாதானத்திற்கு ஏற்றவைகளை அவர்கள் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்களுடையக் கண்களுக்கு அது மறைவாய் இருக்கிறது. “இப்பிரபஞ்சத்தின் அதிபதியானவன் மனக்கண்களைக் குருடாக்கிப் போட்டிருக்கிறான்” என்று வேதம் சொல்லுகிறது. “சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பயித்தியமாயிருக்கிறது.” தேவனுடைய உன்னதமானக் காரியங்கள் அவர்களுக்குத் தேவையற்றதாய் இருக்கிறது. என்ன ஒரு பரிதாபமான நிலை! உங்களுடைய வாழ்க்கை எவ்விதமாக இருக்கிறது? நீங்கள் தேவனுடைய உண்மையான அன்பிற்குள்ளாய் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது தேவனை விட்டு விலகிப் போனவர்களாய்க் காணப்படுகிறீர்களா? நம்முடைய வாழ்க்கையைக் குறித்து ஆராய்ந்துப் பார்க்க தேவன் தாமே நமக்கு உதவி செய்ய வேண்டும். தேவனைத் துக்கப்படுத்துகிற காரியங்கள் உங்களில் இருக்குமானால் அவரிடத்தில் அறிக்கையிட்டு ஒப்புரவாகுங்கள். நீங்கள் வழிவிலகிப் போனவர்களாய் இருந்தால் உங்களுக்காகவும் இயேசு கிறிஸ்து கண்ணீர் விடுகிறார்.