டிசம்பர் 26     கர்த்தரை நோக்கிப் பார்     மீகா 7: 1-11

      “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” (மீகா 7:7).

      ஒருவேளை மற்றவர்கள் மற்ற பல காரியங்களை நோக்கிப் பார்ப்பவர்களாக இருக்கலாம். ஆனால் நான் கர்த்தரை மட்டுமே நோக்கிக் கொண்டு தேவனுக்காக மாத்திரமே காத்திருப்பேன். நம்முடைய வாழ்க்கையில் தேவனை நாம் நோக்கிப் பார்க்கும்படியான மனப்பாங்கை தேவன் நமக்கு கொடுக்க வேண்டும். அநேக சமயங்களில் நம் வாழ்க்கையில் கர்த்தரை நோக்கிப் பார்க்க தவறிவிடுகிறோம். கர்த்தருக்காக காத்திருக்கவும் தவறிவிடுகிறோம். ஆகவே அநேக சமயங்களில் நாம் தோல்விகளை சந்திக்கிற நபராய் காணப்படுகிறோம்.

      இன்னுமாக சங்கீதக்காரர்கள், “நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார். அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்”(சங்கீ 55:16-17) என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். தேவனை மாத்திரமே நாம் நோக்கிப் பார்ப்பது மிக அவசியமான ஒன்று. அநேக சமயத்தில் நெருக்கமான சூழ்நிலையில் பலவிதமான காரியங்களை நோக்கிப் பார்க்கிறோம். ஆனால் அது தவறு.

      கர்த்தர் தம்முடைய மக்களைப் பார்த்து, “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை”(ஏசாயா 55:22)  என்று அழைக்கிறதைப் பார்க்கிறோம். அவரை நோக்கிப் பார்க்க நாம் கற்றுக் கொள்ளுவோம். நாம் அவரை நோக்கிப் பார்க்கும்பொழுது, ‘ அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் ‘ என்று வேதம் சொல்லுகிறது. அவரை நம்பி அவருக்காக நாம் காத்திருக்கும்பொழுது ஒருபோதும் வெட்கப்பட்டு போக மாட்டோம். இன்னுமாக வேதம் சொல்லுகிறது, “அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்”(ஏசாயா 25:9). அருமையானவர்களே கர்த்தரை மாத்திரமே நோக்கிப் பாருங்கள்.