ஆகஸ்ட்  15             

“அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும்
அசுத்தமாயிருக்கட்டும்” (வெளி 22:11)

இன்றைக்கு அநேகர் உள்ளத்தில் எழும்படியான கேள்வி என்னவென்றால், “நான் தேவனுக்கென்று வாழவிரும்புகிறேன். ஆனால் எனக்கோ அநேக துன்பங்கள், கஷ்டங்கள், பாடுகள்; தேவனை அறியாத எத்தனையோ பேர் என் கண் முன்பாக செழிப்பாய் இருக்கிறார்கள். அநியாயஞ்செய்கிறவன் கொழுக்கிறான்  என்று எண்ணுகின்றனர்.

தேவ மனிதனாகிய ஆசாப் கூட, சங்கீத புத்தகத்தில் தேவனை அறியாத மக்களின் வாழ்வைக் குறித்து இவ்விதம் எழுதுகிறார். “துன்மார்க்கர்கரின் வாழ்வை நான் காண்கையில் வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமை கொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள், மனுஷர் படும் உபாதியை அடையார்கள்” (சங்கீதம் 73:3,4,5)

ஆனால் தேவன் “நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும் பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாயிருக்கட்டும்” என்று  தம்முடைய மக்களைப் பார்த்து சொல்லுகிறார். இவ்விரண்டு மக்களின் முடிவைக் குறித்து நீ சிந்தித்துப் பார்க்கவேண்டும். தேவனை அறியாத மனிதனின் முடிவு அழிவு, நித்திய அக்கினி, நித்திய வேதனை, ஆனால் நீதிமானின் முடிவு சமாதானம், நித்திய வாழ்வு. தேவனை அறியாத மனிதன் இந்த  உலகத்திற்காக மாத்திரம் வாழ்பவன். அவன் நித்தியமான காரியங்களைகுறித்து அலட்சியப்படுத்துகிறவன்.

ஆனால் மெய்யான விசுவாசியோ காண்கிறவைகளை அல்ல காணாதவைகள் மேல் நோக்கமுள்ளவன். அவன் மேலும் மேலும் தேவனுக்குப் பிரியமாக ஜீவிக்க வாஞ்சிப்பான் அவன் இவ்விதம் சொல்லக்கூடியவனாக இருப்பான். “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையிலே ஏற்றுக்கொள்வீர். பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை.” (சங் 73:24,25)